உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குப்பை தானே என அலட்சியம் வேண்டாம்!

குப்பை தானே என அலட்சியம் வேண்டாம்!

''தி ருப்பூரில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் அடிப்படையான குப்பைகளை தரம் பிரிக்கும் பணியை வீடுகளில் இருந்தே துவக்குவதற்கு எடுக்கப்பட்டுள்ள முன்னெடுப்பு, சுற்றுச்சூழல் மாசுபாட்டால் எதிர்காலத்தில் ஏற்படப் போகும் மிகப்பெரும் பாதிப்பில் இருந்து திருப்பூரை காப்பாற்றும்,'' என, கழிவு மேலாண்மை மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை நிபுணர் அசோக்குமார் தெரிவித்தார். அவர் நம்முடன் பகிர்ந்த கருத்துகள்: திருப்பூர் மாநகராட்சியில் தினசரி சேகரமாகும், 700 - 800 டன் குப்பையை முறையாக அப்புறப்படுத்த முடியாத நிலை, மாநகராட்சிக்கு ஏற்பட்டிருக்கிறது; சுற்றியுள்ள கிராம ஊராட்சிகளிலும், குப்பை மேலாண்மை என்பது முழுமையாக இல்லை. பாறைக்குழிகள், திறந்தவெளியில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. எனவே, திருப்பூரில் நிலவும் குப்பை பிரச்னைக்கு தீர்வு காண, வீடுகளிலேயே குப்பைகளை பிரிக்க வேண்டும். நகரில் உள்ள, குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் மையங்களை செயல் பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். பயோ சி.என்.ஜி., ஆலை அமைக்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும். கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து, நொய்யல் மற்றும் நல்லாற்றில் கலக்கும் நீரை சுத்திகரித்து வெளியேற்ற வேண்டும். தற்போது, வீடுகளில் இருந்தே குப்பைகளை தரம் பிரித்து வழங்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் தன்னார்வ அமைப்பினர் ஈடுபட்டு வருகின்றனர்; இதற்கு, மாநகராட்சி நிர்வாகமும் ஒத்துழைப்பு வழங்கி வருகிறது. திடக்கழிவு மேலா ண்மை திட்டத்தின் அடிப்படை பணியான குப்பை தரம் பிரிக்கும் பணியை வீடுகளில் இருந்தே துவக்குவது, சுற்றுச்சூழல் மாசுபாடால் எதிர்காலத்தில் ஏற்படப் போகும் மிகப்பெரும் பாதிப்பில் இருந்து திருப்பூரை காப்பாற்றும். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ