| ADDED : பிப் 10, 2024 11:27 PM
பல்லடம்:''இது என்னடா வாழ்க்கை என்பதற்கு பதில், இது என்னுடைய வாழ்க்கை என்று கூறும் அளவுக்கு நாம் இருக்க வேண்டும்'' என்று கவிஞர் கவிதாசன் பேசினார்.பல்லடம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா நேற்று கொண்டாடப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியை சாந்தி தலைமை வகித்தார். நகராட்சி தலைவர் கவிதாமணி, கோவை கிருஷ்ணம்மாள் கல்லுாரி மனிதவள மேம்பாட்டாளர் கவுரி, பல்லடம் தமிழ் சங்கத் தலைவர் கண்ணையன், ரெயின்போ ரோட்டரி பட்டய தலைவர் நடராஜன், லயன்ஸ் சங்க நிர்வாகிகள் குமார், தங்கராஜ், ராம்பிரபு முன்னிலை வகித்தனர். உதவி தலைமை ஆசிரியை புஷ்பலதா வரவேற்றார்.கவிஞர் கவிதாசன் பேசியதாவது:இது என்னடா வாழ்க்கை என்பதற்கு பதில், இது என்னுடைய வாழக்கை என்று கூறும் அளவுக்கு நாம் இருக்க வேண்டும். நாம் வாழ்வதை சிறந்த வாழ்க்கையாக மாற்ற வேண்டியது நம் கையில்தான் உள்ளது. நம் கோரிக்கைகளை அடைய உறுதியான மன நிலை வேண்டும்.இன்று தலை குனிந்து படித்தால், நாளை நமது சமுதாயத்தையே தலை நிமிர செய்யலாம். முதலில் படுக்கையில் இருந்து விரைவில் எழ பழகிக்கொள்ள வேண்டும். கொக்கை தேடி குளம் வராது என்பார்கள். அதுபோல், கல்வி நம்மைத்தேடி வராது; கல்வியை தேடி நாம்தான் செல்ல வேண்டும்.கல்வி கசப்பானது; ஆனால், அதன் கனிகள் இனிப்பானவை. சொந்தக்காரர்கள் கைவிட்டாலும், சொந்தக்கால் கைவிடாது. கல்வியை யாராலும் திருட முடியாது.எதிர்காலம் உங்கள் கையில்தான் உள்ளது. அதை வெற்றிப் பாதைக்கு எடுத்துச் செல்வது நீங்கள் எடுக்கும் முடிவுகளை பொறுத்தது.இவ்வாறு அவர் பேசினார்.முன்னதாக, மாணவியரின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. வெற்றி பெற்ற மாணவியருக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. ஆசிரியை குளோரி நன்றி கூறினார்.