| ADDED : நவ 25, 2025 05:44 AM
உடுமலை: உடுமலை - மூணாறு ரோட்டில், யானைகள் உலா வருவதால், வாகனங்கள், சுற்றுலா பயணியருக்கு வனத்துறை சார்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. உடுமலையிலிருந்து கேரளா மாநிலம், மறையூர், காந்தலுார், மூணாறு என சுற்றுலா மையங்களுக்கு செல்லும் பிரதான வழித்தடமாக உடுமலை - மூணாறு ரோடு அமைந்துள்ளது. உடுமலை, அமராவதி வனச்சரகம் மற்றும் கேரளா மாநிலம் சின்னாறு வனப்பகுதி வழியாக அமைந்துள்ள இந்த ரோட்டில், தற்போது வன விலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. ஒன்றை கொம்பன் யானை மற்றும் யானை கூட்டங்கள் மழை காரணமாக, ரோட்டில் முகாமிட்டுள்ளதால், இந்த ரோட்டில் செல்லும் வாகனங்கள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும். ஒன்பதாறு செக்போஸ்ட் முதல் சின்னாறு செக்போஸ்ட் வரை, இடையில் வனப்பகுதியில் வாகனங்கள் நிறுத்தக்கூடாது என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். வனத்துறையினர் கூறியதாவது: வனப்பகுதியில் மழை பெய்து வருவதால், யானை உள்ளிட்ட வன விலங்குகள் ரோடு பகுதியில் நடமாடி வருகின்றன. ரோட்டில், வனவிலங்குகளை கண்டால் வாகனங்களை நிறுத்தக்கூடாது. வனவிலங்குகளுக்கு அருகே சென்று, புகைப்படங்கள் எடுக்கவோ வனவிலங்கு களை தொந்தரவு செய்யவோ கூடாது. தற்போது, உடுமலை - மூணாறு ரோட்டில், யானைகளின் நடமாட்டம் அதிக அளவில் உள்ளதால், கண்காணிப்பு பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு தெரிவித்தனர்.