உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  நல்லாற்றில் ஆக்கிரமிப்பு: மடை மாற்றிய அதிகாரிகள்?

 நல்லாற்றில் ஆக்கிரமிப்பு: மடை மாற்றிய அதிகாரிகள்?

உ ட்கட்டமைப்பு சார்ந்த வளர்ச்சி திட்டங்களை நீர்த்து போகச் செய்வதில் முக்கிய பங்காற்றுவது, அந்த இடம் சார்ந்த ஆக்கிரமிப்புகள் தான். அது, வீடானலும் சரி; ரோடானாலும் சரி; காடனாலும் சரி. அவ்வாறு ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கியுள்ள நல்லாற்றை மீட்டெடுக்க முடியாத நிலையில் அரசு இயந்திரங்கள் தடுமாறிக் கொண்டிருக்கின்றன. கடந்த பல ஆண்டுகளாகவே, நல்லாறு செல்லும் வழித்தடத்தில் அதிகரித்து வரும் ஆக்கிரமிப்புகளால், மழைக்காலங்களில் வெள்ள நீர் செல்ல வழியின்றி, ஆங்காங்கே தடுக்கப்படுகிறது. கோவை மாவட்டம், அன்னுார் வட்டாரம் மற்றும் அவிநாசியில் கனமழை பெய்யும் போது, நல்லாறு செல்லும் வழித்தடத்தில் உள்ள குளம், குட்டை, தடுப்பணைகள் நிரம்புகின்றன. தொடர்ச்சியாக மழை பெய்யும் போது, வெள்ளம் பெருக்கெடுத்து, கரையை ஒட்டியுள்ள வீடுகளுக்குள் புகுந்து சேதம் ஏற்படுத்துகிறது. கடந்த, 1977ம் ஆண்டில், கனமழை பெய்து நல்லாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்த போது, அவிநாசி கோவிலருகே இருந்த பாலம் முற்றிலுமாக இடிந்தது. கடந்த, 2017, செப்., 8ம் தேதி வெள்ளம் பெருக்கெடுத்த போது, அவிநாசி கோவில் முழுக்க வெள்ளக்காடாக மாறியது; வீடுகளுக்குள்ளும் வெள்ளம் புகுந்தது. அவிநாசி அருகே ஆட்டை யம்பாளையம் துவங்கி சீனிவாசபுரம், மங்கலம் ரோடு பாலம் வரையும், பின் அங்கிருந்து புதிய பஸ் ஸ்டாண்ட் பின்புறம் வரை செல்லும் நல்லாற்றின் பெரும் பகுதி ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது. இரு கரைகளிலும் கடைகள், வீடுகள் கட்டப்பட்டுள்ளன; தவிர, விவசாய நிலமாகவும், நல்லாற்று நிலம் கபளீகரம் செய்யப்பட்டுள்ளதாக, இயற்கை ஆர்வலர்கள் வேதனைப்படுகின்றனர். நீர்வளத்துறை வட்டாரங்கள் கூறியதாவது: அவிநாசியில் நீர்நிலை ஆக்கிரமிப்பாளர்களுக்கு 'நோட்டீஸ்' வழங்கி, அவர்களை காலி செய்யும் முனைப்புடன், கடந்த, 2017ல், ஆக்கிரமிப்பு கட்டடங்களை 'சர்வே' செய்து பட்டியல் வழங்குமாறு, வருவாய் துறையினரிடம் கேட்டிருந்தோம். வருவாய்த்துறையினர், மிக 'சாதுர்யமாக' நீர் நிலை ஆக்கிரமிப்பு கட்டடங்களுடன் சேர்த்து, நத்தம் நிலத்தில் உள்ள வீடுகளின் விவரத்தையும் இணைத்து வழங்கினர். கால்நடை மருத்துவமனை, மங்கலம் ரோடு பிரிவு உள்ளிட்ட நல்லாற்றின் ஓரத்தில் ஒன்றரை சென்ட் தான் பட்டா வழங்கப்பட்டது; ஆனால், பலரும் ஆற்றை ஆக்கிரமித்து கட்டுமானங்களை நீட்டித்துக் கொண்டனர். நத்தம் நில வகைப்பாட்டில் இருந்த கட்டட உரிமையாளர்கள், ஐகோர்ட் சென்று, ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கைக்கு எதிராக இடைக்கால தடையுத்தரவு பெற்றனர். மீண்டும், கடந்த, 2018ல், மறு சர்வே செய்யப்பட்டது. கிட்டத்தட்ட, நீர்நிலை ஆக்கிரமிப்பில் இருந்த, 152 வீடுகளுக்கு 'நோட்டீஸ்' வழங்கப்பட்டது. ஆனால், நல்லாறு என்பது, 'பனந்தோப்பு' என்ற வரையறைக்குள் வருகிறது என்பது போன்ற பல காரணங்களை சொல்லி, ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையை நீர்த்து போகச் செய்து விட்டனர். இவ்வாறு, அவர்கள் கூறினர். 'பனந்தோப்பு''நத்தம்' பூமியானது அவிநாசி பேரூராட்சி முன்னாள் துணை தலைவர்மனோகரன் கூறியதாவது: அவிநாசி நகர எல்லைக்குள் ஓடும் 'நல்லாறு' என்பது, வருவாய்த்துறை ஆவணத்தில் இல்லை. ஆட்டையம்பாளையம் துவங்கி மங்கலம் பாலம் பிரிவு வரையுள்ள நீர்நிலை என்பது, வருவாய்த்துறை ஆவணத்தில், 'காப்புக்காடு - பனந்தோப்பு' என்ற வகையில் தான் இருந்தது. இது 'நிலவியல் ஓடை'. பிரிட்டிஷ் காலத்தில் இருந்து அங்கு, 67 ஏக்கர் 49 சென்ட் நிலம் பனந்தோப்பாக இருந்தது. அங்கு விவசாயம் செய்து வந்தவர்கள், ஆக்கிரமிப்பு செய்திருந்தவர்களுக்கு, அப்போதே வருவாய்த்துறை சார்பில், நத்தம் நிலமாக வகை மாற்றம் செய்து, பட்டா கொடுக்கப்பட்டு விட்டது. தற்போதைய நிலையில், புதர்மண்டிக்கிடக்கும் இந்த நீர்நிலையை பராமரிக்க வேண்டியது, அவிநாசி நகராட்சி தான். நல்லாறு நீர்வழிப்பாதைக்கு நிலம் தேவைப்பட்டால், 'உபரி கால்வாய்' என்ற பெயரில், தேவையான நிலத்தை 'சர்வே' செய்து, நீர்வளத்துறை பெயரில், அந்நிலத்தை வகை மாற்றம் செய்து கொள்ள வேண்டும். மாறாக, மங்கலம் ரோடு பிரிவு முதல் சுடுகாடு, புதிய பஸ் ஸ்டாண்ட் வழியாக, செம்மடை ஏரிக்கு செல்லும், அவிநாசி நகராட்சி எல்லையில் உள்ள நல்லாறு நீர்வழிப்பாதையில் பெரும் பகுதி ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது; அவை தான் அகற்றப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ