தமிழ் கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு
''தமிழ் கற்றவர்களுக்கு பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்புகள் உள்ளன. அரசுத்துறையிலும் பலர் சாதித்துள்ளனர்'' என்று திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லுாரி தமிழ்த்துறைத் தலைவர் பாலசுப்பிரமணியன் கூறினார். அவர், நம்மிடம் பகிர்ந்தவை: தமிழ் படிக்கும் மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, நாடகம், மேடைப்பேச்சு தெரிந்திருக்க வேண்டும். பிறதுறைகளில் மாணவர்களுக்கு இருக்கும் அனைத்து வாய்ப்புகளும் தமிழ் படித்தோருக்கும் இருக்கிறது. எழுத்து, பேச்சு, தொல்லியல், மொழியியல், மொழிபெயர்ப்பு, ஊடகம், திரை, நாடகம், விளம்பரம், ஆசிரியர், அரசியல் போன்ற பல துறைகளில் வேலைவாய்ப்பு இருக்கிறது. அரசுத்துறையிலும் பலர் சாதித்துள்ளனர். தனித்துவம்கொண்டவர்கள் சராசரி மாணவர் எந்த துறை வேண்டுமானாலும் படிக்கலாம். தமிழ் மாணவர்கள் தனித்துவமானவர்கள். படைப்பாற்றல், உயர்ந்த லட்சியம், கொண்டவர்கள். உலக அனுபவம், உலகறிவு அதிகமாக இருக்கிறது. பொருளீட்டுவது வேறு, படிப்பது வேறு. தமிழ் படித்தவர் தன்னையும் உலகையும் உணர்கிறார்கள்; உயரத்திற்குச் செல்ல எண்ணுகிறார்கள். பொருளாதாரத்தை பொறுத்தவரை வேலையாட்களை உருவாக்குவதுதான் பிற துறைப் படிப்பு. தமிழ் கற்றோர், தனது படைப்பாற்றலால், தனித்து இருக்கிறார்கள். தாய்மொழிக்குமுக்கியத்துவம் தமிழ் என்பது பாடமல்ல. அது மொழி, நம் தாய்மொழி. எவராக இருந்தாலும் தாய்மொழியில் சிறந்தால் மட்டுமே சாதிக்க முடியும். திறனை வெளிப்படுத்தும் கருவியாக இருப்பது மொழி. தாய்மொழிக்கான முக்கியத்துவத்தை பள்ளியிலிருந்தே கொடுக்க வேண்டும். அறிவை போதிக்க தாய்மொழியே சிறந்தது. பிறமொழி கற்றுக்கொள்வது தவறில்லை, யாவரும் எம்மொழியும் கற்கலாம். ஆனால் அறிவைப் போதிக்க தாய்மொழி தான் உகந்தது. உந்து சக்தி - ஊக்க சக்தி கொடுக்கிறது. தாய்மொழியான மொழிப்பாடத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பல கல்லுாரிகளில் 'தமிழ் மன்றம்' இயங்கிக் கொண்டிருக்கிறது. இலக்கிய விழா, விவாதம் மற்றும் போட்டிகள் மூலம் மாணவரிடம் ஒளிந்திருக்கும் திறனை வெளிக்கொணர்கிறது. பேச்சு வழக்கால் மொழி அழியாது இன்றிருக்கும் சினிமா, ஊடகத்தில் ஆங்கிலப் பயன்பாடு இருக்கிறது. அவற்றால் தமிழை ஒன்றும் செய்ய முடியாது. அது பல ஆயிரம் ஆண்டுகளாக இருக்கிறது. இன்னும் பல ஆயிரம் ஆண்டுகள் அப்படியேதான் இருக்கும். பிழைப்புக்காக இவர்கள் தமிழை விடுத்து ஆங்கிலம் பயன்படுத்துவதால் தமிழை வீழ்த்த முடியாது. சிலர் வேண்டுமென்றே ஆங்கிலம் பேசுகின்றனர். தமிழ் தெரியாதவர்கள் ஆங்கிலம் பேசுகின்றனர் என்று எடுத்துக் கொள்ள வேண்டும். பேச்சு வழக்கில் பிற மொழிக்கலப்பால் தமிழை அழிக்க முடியாது. மொழி என்பது எழுத்து வழக்கில் காலம் கடந்து நிற்கக்கூடியது. சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற காப்பியங்கள் இன்றும் இருப்பது எழுத்து வழக்கால் தான். அக்காலத்தில் எப்படி பேசினார்கள் என்று யாருக்கும் தெரியாது. இவ்வாறு, பாலசுப்பிரமணியன் கூறினார். செயற்கை நுண்ணறிவால்: மொழித்துறை பாதிக்காது: படைப்பாளனாக எந்தக் கல்லுாரியும் இல்லை. இயல்பாகவே படைக்கும் திறன் இருக்க வேண்டும். அதற்கு வாசிக்க வேண்டும். வாசிக்க துாண்ட வேண்டும். பிற துறைக்கு செயற்கை நுண்ணறிவால் (ஏ.ஐ.) பாதிப்பு வந்தாலும் மொழித்துறைக்கு வராது. பாடகர் போல பாடவும் பேச்சாளர் போல் பேசவும் வைக்கலாம். ஆனால் பாரதி யார், கண்ணதாசன் போல கவிதை இயற்ற முடியாது. இதற்கு இயற்கையான நுண்ணறிவு வேண்டும், செயற்கை நுண்ணறிவால் முடியாது. மொழிபெயர்ப்பிலும் அப்படித்தான் இருக்கிறது. சாதாரணமாக நாம் 'வாய்ஸ் டைப்பிங்' செய்தாலும் மீண்டும் திருத்த வேண்டியிருக்கிறது. மொழிபெயர்ப்பிலும் அப்படித்தான் இருக்கிறது. - பாலசுப்பிரமணியன்: தமிழ்த்துறைத் தலைவர்: சிக்கண்ணா கல்லுாரி.: