உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / உலகின் எதிர்பார்ப்பு; திருப்பூர் நிறைவேற்றுமா!

உலகின் எதிர்பார்ப்பு; திருப்பூர் நிறைவேற்றுமா!

திருப்பூர், பிப். 18-உலகம் எதிர்பார்க்கும் 15 வகை ஆடைகளில், நம் நாடு ஐந்து வகை ஆடைகளை மட்டுமே தயாரிக்கிறது.உலகை ஈர்க்க அனைத்து வகை ஆடைகளையும் தயாரிக்கும் திறன் பெற்றாக வேண்டிய கட்டாயம் உள்ளது. ''தேவைகளை பூர்த்தி செய்யும் நுாதன ஆடை உற்பத்தி, சொந்தமான 'பிராண்ட்' கட்டமைப்பு, பரவலான ஏற்றுமதி வர்த்தகம் போன்ற மாற்றங்களை புகுத்தினால், இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் அபார வளர்ச்சி பெறும்'' என, ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில்(ஏ.இ.பி.சி.,) தெரிவித்துள்ளது. தன்னிச்சையாக வளர்ச்சி பெற்ற திருப்பூர் நகரம், பின்னலாடை ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தில் சமபங்கு வகிக்கிறது. சில ஆண்டுகளாக, ஏற்றுமதி வர்த்தகம் வளர்ச்சி காணாமல் இருந்ததால், புதிய வர்த்தக வளர்ச்சி இல்லை.உலக நாட்டு மக்களின் வாழ்க்கை முறையின் அடிப்படையில், 'டி-சர்ட்', உள்ளாடை, இரவு நேர ஆடை, விளையாட்டு ஆடை, மருத்துவ ஆடைகள் என, 15 வகையான ஆடைகளின் தேவை உள்ளது. உலக அளவில், ஆடை ஏற்றுமதியில் முதலாவதாக இருப்பது சீனா.பருத்தி மற்றும் செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தியில் வலுவாக உள்ள சீனா, உலக நாடுகளுக்கு அதிக அளவு ஏற்றுமதி செய்கிறது. வளர்ந்த நாடுகளின் ஆடை இறக்குமதியில், சீனாவின் பங்களிப்பு, 40 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கிறது; அடுத்த இடத்தில் வங்கதேசம் இருக்கிறது.இந்தியாவின் பின்னலாடை நிறுவனங்கள், ஆண்டுக்கு, 2,200 கோடி எண்ணிக்கையிலான பின்னலாடைகள் தயாரிக்கும் அளவுக்கு திறன் பெற்றுள்ளன. இருப்பினும், உலக நாடுகள் எதிர்பார்க்கும், 15 வகையான ஆடைகளில், இந்தியா ஐந்து வகை ஆடைகளை மட்டுமே ஏற்றுமதி செய்வதாக, ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.,) தெரிவித்துள்ளது.வங்கதேசம், 11 வகையான ஆடைகளையும், வியட்நாம், 14 வகை ஆடைகளையும், துருக்கி ஒன்பது வகையான ஆடைகளையும் ஏற்றுமதி செய்கின்றன. எனவே, உலக நாடுகள் எதிர்நோக்கும் வகையிலான, கூடுதல் ஆடை ரகங்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்பதே, இந்தியாவுக்கான அடுத்தகட்ட இலக்காக உள்ளது.

ஏற்றுமதி பரவலாக்கம்

இந்தியாவின் ஒட்டுமொத்த ஆயத்த ஆடைகள் ஏற்றுமதியில், முக்கிய நாடுகள் மட்டும் அதிக பங்களிப்பை செலுத்துகின்றன. குறிப்பாக, 10 நாடுகள் மட்டும், 75 சதவீத பங்களிப்புடன் இருக்கின்றன. கடந்த 2023ம் ஆண்டு நிலவரப்படி, அமெரிக்கா, 34.5 சதவீதம், ஐரோப்பா, 28.20 சதவீதம், பிரிட்டன், 9 சதவீத பங்களிப்புடன இருக்கின்றன.இம்மூன்று நாடுகளுடன் மட்டும், ஏற்றுமதி வர்த்தகம் அதிக அளவு இருந்ததால், சர்வதேச பிரச்னைகளின் போது, இந்தியாவுக்கு நேரடி பாதிப்பு ஏற்பட்டது. இனிவரும் நாட்களில், வளர்ந்த நாடுகளை மட்டுமே நம்பியிருக்காமல், உலகம் முழுவதும் உள்ள பிற நாடுகளுடன் வர்த்தக வாய்ப்புகளை உருவாக்க, மத்திய அரசு சிறப்பு சலுகைகளையும், வர்த்தக ஒப்பங்களையும் உருவாக்க வேண்டும்.ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கவுன்சில் (ஏ.இ.பி.சி.,) அதிகாரிகள் கூறுகையில், 'ஒவ்வொரு 10 ஆண்டுகள் இடைவெளியில், ஜவுளித்துறையில் புதிய மாற்றங்கள் அவசியமாகிறது. அதன்படி, பின்னலாடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் பொதுசெயலர் மதிலேஷ் தாக்கூர், இந்தியாவின் ஆயத்த ஆடை ஏற்றுமதி வளர்ச்சிக்கு நாம் மேற்கொள்ள வேண்டிய பணிகள் மற்றும் முயற்சிகள் குறித்து தெரிவித்துள்ளார்.அரசு வழிகாட்டியபடி, புதிய கூட்டு முயற்சியை மேற்கொள்ள, திருப்பூர் தொழில்துறையினர் தயாராக வேண்டும்,' என்றனர்.ரூ.3.28 லட்சம் கோடி வர்த்தகம்சமீபத்தில், டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.சி.சி.,) பொதுசெயலர் மிதிலேஷ் தாக்கூர் பேசுகையில், ''ஏற்றுமதி வர்த்தக பரவலாக்கம், புதிய வகை ஆடை உற்பத்தி, திருப்பூருக்கென சொந்தமான பிராண்டு உருவாக்கம் போன்ற,புது வகை யுத்திகளை செயல்படுத்தினால், ஆயத்த ஆடை ஏற்றுமதிவர்த்தகம் பெருகும். வரும், 2030ம் ஆண்டுக்குள்,3.28 லட்சம் கோடி ரூபாய் வர்த்தகமாக வளர்ச்சி அடையும்,'' என்றார்.'பிராண்ட் திருப்பூர்'நம் நாட்டில், ஆயத்த ஆடை உற்பத்தியில், போதிய திறன் மேம்பாடு குறைவாக இருக்கிறது. குறிப்பாக, திருப்பூரை பொறுத்தவரை, வெளிநாடுகளில் உள்ள, 'பிராண்டட்' நிறுவனங்களுக்கு தேவையான ஆடைகளை உற்பத்தி செய்கின்றன. அந்நிறுவனங்கள், ஐந்து மடங்கு வரை அதிக விலை நிர்ணயம் செய்து, இந்தியாவிலேயே, அவ்வகை ஆடைகளை விற்கின்றன.பின்னலாடை நிறுவனங்களின் உற்பத்தி திறனும், ஏற்றுமதியும் உரிய மதிப்பை பெற, திருப்பூருக்கென, பிரத்யேக 'பிராண்ட்'களை உருவாக்க வேண்டும். நமது பிராண்ட்களை, உலக நாடுகளுக்கான பிராண்டாக மாற்றவும் முயற்சிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ