உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  திருப்பூர் அருகே போலி டாக்டர் கைது

 திருப்பூர் அருகே போலி டாக்டர் கைது

திருப்பூர்: பிளஸ் 2 முடித்து விட்டு, மருந்துக்கடை நடத்தியதுடன், நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரை வழங்கிவந்த, போலி டாக்டர் மருத்துவக் குழுவினரிடம் பிடிபட்டார். போலி டாக்டர் குறித்த தகவலின்பேரில், திருப்பூர் மாவட்டம், தாராபுரம், முத்தையன்பட்டி பகுதியில் மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் மீரா, உடுமலை அரசு மருத்துவமனை மருத்துவர் ரவி, கண்காணிப்பாளர் ஹரி கோபாலகிருஷ்ணன், வட்டார மருத்துவ அலுவலர் ஸ்ரீசுகு தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்பகுதியில் இயங்கி வரும், விநாயகா மெடிக்கல்ஸ் சென்று பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை கேட்ட போது அதன் உரிமையாளர் வெள்ளைசாமியிடம், 50, ஆவணங்கள் எதுவும் இல்லை. மருத்துவம் பயின்ற, பதிவு பெற்ற மருத்துவரால் மட்டுமே பரிந்துரைக்கப்படும், அலோபதி வகை மருந்துகள், ஆங்கில மருத்துவம் சார்ந்த உபகரணங்கள் மருந்துக்கடையில் பயன்படுத்தி வந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து, மருந்தகத்தை பூட்டி 'சீல்' வைத்த அதிகாரிகள் வெள்ளைச்சாமியை குண்டடம் போலீசாரிடம் ஒப் படைத்தனர். இது குறித்து, திருப்பூர் மாவட்ட மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் மீரா கூறுகையில், ''பிளஸ் 2 வரை படித்து விட்டு, வெள்ளைச்சாமி மருந்தகம் நடத்தியதுடன், 20 ஆண்டுகளாக மருத்துவம் பார்த்துள்ளார். ஆய்வின் போது, நோயாளிகளை பார்த்து, மருந்து வழங்கி கொண்டிருந்தார். மருத்துவ நலப்பணிகள் துறையிடம் பதிவுச்சான்று பெறவில்லை. ஆவணங்களை ஆய்வு செய்ததில் இவரிடம் எந்த கல்விதகுதி ஆவணங்களும் இல்லை; அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ கல்வித்தகுதிச் சான்றும் இல்லை. பதிவுச்சான்று, உரிய கல்விதகுதி பெறாமல், பிளஸ் 2 மட்டும் படித்து விட்டு, நோயாளிகளுக்கு அலோபதி மருத்துவம் பார்த் துள்ளார். போலி டாக்டர் மீது நடவடிக்கை எடுக்கும் படி, போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்