உடுமலை: பி.ஏ.பி., பாசன திட்டத்தில், 58 ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்களுக்கு ஆதாரமாக உள்ள உடுமலை கால்வாய் சிதிலமடைந்து காணப்படுவதால், பாசன நீர் வீணாகி வருவதோடு, பல இடங்களில் உடையும் அபாய நிலையில் உள்ளது. பி.ஏ.பி., பாசனத்திட்டத்தில் பிரதான கால்வாய்க்கு இணையாக, நான்கு மண்டல பாசனத்திற்கும் நீர் திறக்கும் வகையில், உடுமலை கால்வாய் அமைந்துள்ளது. நான்கு மண்டல பாசனத்தின் போதும், உடுமலை கால்வாயில் நீர் திறக்கப்படும். திருமூர்த்தி அணை துவங்கி, உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம் தாலுகா வரை, 38.12 கி.மீ., துாரம் அமைந்துள்ள இக்கால்வாய் வாயிலாக, 58 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. முழுவதும் கான்கிரீட் கால்வாயாக அமைந்துள்ள இக்கால்வாய், பல ஆண்டுகளாக பராமரிக்காததால், பெரும்பாலான பகுதிகளில் கால்வாய் கரைகள் உடைந்தும், கான்கிரீட் சிலாப்கள் விழுந்தும், பல இடங்களில் மண் கால்வாய்களாக மாறியுள்ளன. இதனால், பாசனத்திற்கு திறக்கப்படும் நீர் பெருமளவு வீணாகி, விவசாயிகள் கடுமையாக பாதித்து வருகின்றனர். உடுமலை கால்வாயை முழுவதுமாக புதுப்பிக்க வேண்டும், என பல ஆண்டுகளாக விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். சிதிலமடைந்து காணப்படும் கால்வாய் காரணமாக, இதன் கீழ் பயன்பெறும் பாசன நிலங்களுக்கு முழுமையாக நீர் கிடைக்காமல், சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்கள் காய்ந்து வருகின்றன. மேலும், கால்வாய் கரையில், ஏராளமான வீடுகள் உள்ளதால், நீர்வரத்து காரணமாக மண் கரைகள் அரிக்கப்பட்டு, வீடுகள் விழும் அபாய நிலையும் உள்ளது. அதோடு, கால்வாய் உடைப்பு ஏற்பட்டு, வீடுகள் மற்றும் விவசாய நிலங்களுக்குள் நீர் புகுந்து பெரும் பாதிப்பு ஏற்படும் அவலம் உள்ளது. அதே போல், உடுமலை கால்வாயில் ஜல்லிபட்டி, போடிபட்டி, எலையமுத்துார் உள்ளிட்ட பகுதிகளிலும், கான்கிரீட் கால்வாய் கரைகள் உடைந்து, மண் கால்வாயாக மாறியுள்ள நிலையில், எந்நேரமும் உடையும் அபாயம் உள்ளது. எனவே, உடுமலை கால்வாய் முழுவதையும் புதுப்பிக்க, அரசு உடனடியாக நிதி ஒதுக்க வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.