உப்பாறு அணையில் நீர் திறக்க எதிர்ப்பு விவசாயிகள் முற்றுகையால் பரபரப்பு
திருப்பூர் : தாராபுரம், உப்பாறு அணையிலிருந்து நேற்று பாசன நிலங்களுக்கு நீர் திறக்கப்படவிருந்தது. விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிட்டதால், நீர் திறப்பதை அதிகாரிகள் ஒத்தி வைத்தனர்.திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே உப்பாறு அணை அமைந்துள்ளது. ஏறத்தாழ, 1,100 ஏக்கர் பரப்பளவில் நீர் தேங்கும் விதமாக கட்டப்பட்டுள்ளது. அணையில், 24 அடி உயரம் வரை நீர் தேங்கும் வகையில் உள்ளது.பி.ஏ.பி., கிளை வாய்க்கால் வாயிலாக பெறப்படும் உபரி நீர், சுற்றுப்பகுதியில் மழை பெய்யும் போது சேகரமாகி ஓடைகள் வாயிலாக வரும் நீர் இந்த அணையில் சேமிக்கப்படுகிறது.அணையின் வாயிலாக, 6 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்களும், மறைமுகமாக 15 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்களும் பாசனம் பெறுகிறது.மேலும், சுற்றுப்பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களின் நிலத்தடி நீர் ஆதாரமாகவும் இந்த அணையில் சேமிக்கப்படும் நீர் உள்ளது.நீண்ட காலமாக முழுமையாக நிரம்பாத இந்த அணை கடந்தாண்டு பெய்த மழை காரணமாக ஓரளவு நல்ல முறையில் நிரம்பியுள்ளது.அணை நிரம்பிய நிலையிலும், இதனால், பாசனத்துக்கு நீர் கொண்டு செல்லும் வாய்க்கால் எங்கும் துார் வாரப்படவில்லை.இதனால், அணையிலிருந்து நீர் திறக்கப்பட்டாலும் முழுமையாக விவசாய நிலங்களுக்கு பயன்படுத்த முடியாத நிலை காணப்பட்டது.இதனால், வாய்க்கால் முறையாக துார் வாரினால் மட்டுமே பயனுள்ளதாக இருக்கும் என்று விவசாயிகள் வலியுறுத்தினர்.இருப்பினும், அணையிலிருந்து பாசனத்துக்கு நேற்று நீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த பாசனப் பகுதி விவசாயிகள், அணையில் திரண்டு முற்றுகையிட்டனர்.இதனையடுத்து,விவசாயிகள் கோரிக்கை குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்கவும், நீர் திறப்பை பிப்., 3 ம் தேதிக்கு ஒத்திவைக்கவும் அதிகாரிகள் முடிவு செய்தனர். இதனால், விவசாயிகள் கலைந்து சென்றனர்.