உடுமலை: உடுமலையில் வனத்துறை சார்பில் நடந்த விவசாயிகள் குறை தீர் கூட்டத்தில், எல்லையோர வனத்திலுள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றுவதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதாக விவசாயிகள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை வனச்சரக அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம், வனச்சரக அலுவலர் வாசு தலைமையில் நடந்தது. இதில் விவசாயிகள் பேசியதாவது: வனத்திலிருந்து பல கி.மீ., துாரத்திற்கு காட்டுப்பன்றிகள் சென்று, பல்கி பெருகியுள்ளன. இதனால் பயிர்கள் மட்டுமின்றி, கால்நடைகளுக்கும், மனிதர்களுக்கும் ஆபத்து ஏற்படுகிறது. கேரளாவை போல், தமிழகத்திலும் காட்டுப்பன்றிகளை சுட்டு, கட்டுப்படுத்த வேண்டும். மருள்பட்டியில், பாழடைந்து காணப்படும் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் ஆயிரக்கணக்கான மயில்கள் காணப்படுகின்றன. சுற்றுப்புற கிராமங்களில் சாகுபடி செய்யப்படும், தக்காளி, மிளகாய், மக்காச்சோளம் என அனைத்து பயிர்களையும் நாசம் செய்து வருகின்றன. வன விலங்குகளால் ஏற்படும் பாதிப்புகளுக்கு வனத்துறை நிவாரணம் வழங்குவதில்லை. வன எல்லையில், தளி, திருமூர்த்திமலை, நகர், பொன்னாலம்மன்சோலை என மலையடிவார பகுதிகளில், வனத்துறைக்கு சொந்தமான பல நுாறு ஏக்கர், காடுகளை ஆக்கிரமித்து, அவற்றை அழித்து விவசாய நிலங்களாக மாற்றியுள்ளனர். மலைப்பகுதியிலிருந்து வரும் ஓடைகள், காட்டாறுகளும் அழிக்கப்பட்டு, வனச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், யானை, சிறுத்தை, மான், காட்டுமாடு உள்ளிட்ட வன விலங்குகள் வழித்தடம் மாறியும், நீர் நிலைகள் அழிப்பால் தண்ணீர் தேடியும், விவசாய நிலங்களுக்குள் புகுந்து வருகின்றன. வனப்பகுதி ஆக்கிரமிப்பு குறித்து, உரிய ஆவணங்களுடன் புகார் தெரிவித்தும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. வனத்தை ஆக்கிரமித்தால், கடும் தண்டனை உள்ள நிலையில், அமராவதி மானுப்பட்டி, ஆண்டியகவுண்டனுார், எலையமுத்துார் பகுதிகளில் ஜம்புக்கல் மலை அழிக்கப்பட்டும், வனத்துறை அலட்சியமாக உள்ளது. வன எல்லையில், வனத்துறை சார்பில் சோலார் மின் வேலி, கம்பி வேலி அமைக்க, விவசாயிகளுக்கு மானியம் வழங்க வேண்டும். இவ்வாறு, பேசினர். விரைவில் நடவடிக்கை வனச்சரக அலுவலர் பேசிய போது, ''கேரளாவில் துப்பாக்கி சுடுவதற்கு பயிற்சி அளித்து, ஒட்டுமொத்தமாக காட்டுப்பன்றிகளை சுடுகின்றனர். அதுபோன்று இங்கு நடவடிக்கை எடுக்க முடியாது. தனி குழு அமைத்து துப்பாக்கி சுட பயிற்சி அளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு அரசு மட்டத்தில் தான் முடிவு எடுக்க வேண்டும். வனப்பரப்பு ஆக்கிரமிப்பு குறித்து ஆய்வு செய்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.