திருப்பூர்: டிச. மாதம் இரண்டாவது வாரம் அரையாண்டுத் தேர்வுகள் துவங்க உள்ள நிலையில், இலவச சைக்கிள் வழங்கும், 70 சதவீத பணியை டிச., இறுதிக்குள், நிறைவு செய்ய, மாவட்ட கல்வித்துறை, தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவியருக்கு, இலவச சைக்கிள் வழங்கப்படுகிறது. நடப்பு கல்வியாண்டு, 5.37 லட்சம் இலவச சைக்கிள் வழங்க, 193 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, இதற்கான பணிகள், ஜூலை முதல் நடந்து வருகிறது. நடைமுறை சிக்கல்களால் பிளஸ் 1 படிக்கும் மாணவருக்கு ஒவ்வொரு ஆண்டும் சைக்கிள் வழங்க தாமதம் ஏற்படுகிறது. வரும், 2026ல் சட்டசபை தேர்தல் நடக்கிறது. தேர்தல் நடைமுறைகள் அமலாகினால், தேர்தல் அறிவித்தால் சைக்கிள் கொடுப்பது போன்ற நலத்திட்ட உதவி வழங்கும் விழாக்கள் நடத்த முடியாது. டிச. 10 ல் அரையாண்டு தேர்வுகள் துவங்குகிறது. தேர்வுகள் முடிந்து விடுமுறை கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என தொடர் விடுமுறை வரும். பிப். மாதம் செய்முறை மற்றும் மார்ச் மாதம் பொதுத்தேர்வுகள் நெருங்கி விட்டால், சைக்கிள் வழங்க முடியாத சூழல் உருவாகும். எனவே, டிச. 31க்குள் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒதுக்கப்பட்ட சைக்கிள்களில், 70 சதவீதத்தை வழங்க வேண்டும். மாவட்ட அளவில், இலவச சைக்கிள் உதிரிபாகங்கள் பொருத்தும் மையங்களில் இருந்து, தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு உடனுக்குடன் சைக்கிள் அனுப்பி வைக்க வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் நடப்பாண்டு, 15 ஆயிரத்து, 568 பிளஸ் 1 மாணவ, மாணவியருக்கு, 7.50 கோடி ரூபாயில் இலவச சைக்கிள் வழங்க திட்டமிடப்பட்டு, இதுவரை, 1,500க்கும் மேற்பட்ட சைக்கிள் வழங்கப்பட்டுள்ளது. அதிகளவில் மாணவ, மாணவியர் படிக்கும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் சைக்கிள் வழங்க, ஆறு இடங்களில் ஆயிரக்கணக்கான இலவச சைக்கிள் தருவிக்கப்பட்டு, உதிரிபாகங்கள் பொருத்தும் பணி இரவு பகலாக நடந்து வருகிறது.