உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  செயல்பாட்டுக்கு வந்தது குப்பைக்கான விதிமுறைகள்: திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் தீவிரம்

 செயல்பாட்டுக்கு வந்தது குப்பைக்கான விதிமுறைகள்: திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் தீவிரம்

திருப்பூர்: மாநகராட்சி பகுதியில், திடக்கழிவு மேலாண்மை விதிகளை முறைப்படுத்தும் வகையில், நிர்வாகம் அறிவித்த நடைமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. இது குறித்து சுகாதார பிரிவினர் கண்காணிப்பு மேற்கொள்ளத் துவங்கியுள்ளனர். திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் அமித் அறிக்கை: திருப்பூர் மாநகராட்சியை 'குப்பைத் தொட்டி இல்லாத நகரம்', 'பிளாஸ்டிக் இல்லாத நகரம்' என்ற வகையில் மாற்றம் செய்யும் விதமாக, சில ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவ்வகையில், திடக்கழிவு மேலாண்மை ஆலோசனை கூட்டம் மொத்த கழிவுகள் உருவாக்குவோர் உடன் நடந்தது. இதில் திடக்கழிவுகளை கையாளுவது மற்றும் மாநகராட்சியில் மேற்கொள்ள உள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்தும் விளக்கப்பட்டது. * 'எனது குப்பை - எனது பொறுப்பு' என்ற திட்டத்தில், நகரின் துாய்மையைப் பாதுகாக்க அனைத்துத் தரப்பினர் ஒத்துழைப்பும் வேண்டும். திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016 மற்றும் தமிழக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு விதிகள் 2023-ன்படி, பின்வரும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். * பொதுமக்கள் தங்கள் வீடுகளில் சேகரமாகும் குப்பைகளை மக்கும் குப்பை (பச்சைத் தொட்டி) மற்றும் மக்காத குப்பை (நீலத் தொட்டி) எனத் தரம் பிரித்து வழங்க வேண்டும். மக்கும் குப்பை தினமும், மக்காத குப்பை வாரம் தோறும் புதன் மற்றும் சனிக்கிழமையில், துாய்மைப் பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும். * பொது இடங்கள் மற்றும் நீர்நிலைகளில் குப்பைகளைக் கொட்டுவதைத் தவிர்க்க வேண்டும். * வணிக நிறுவனங்கள் கழிவுகளைத் தரம் பிரித்து மட்டுமே ஒப்படைக்க வேண்டும். தரம் பிரிக்காமல் வழங்கினாலோ அல்லது பொது இடங்களில் கொட்டினாலோ, அந்நிறுவனங்களின் தொழில் உரிமம் ரத்துசெய்யப்படும். * தடை செய்த பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தினால் கடும் அபராதம் விதிக்கப்படும். * மாநகராட்சிப் பகுதியிலுள்ள தொழிற்சாலைகள் தங்கள் கழிவுகளை, மாநகராட்சியால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திடம் மட்டுமே தினமும் ஒப்படைக்க வேண்டும். குறிப்பாக, மின்னணுக் கழிவுகள் மற்றும் வீட்டு தீங்குறு கழிவுகளை வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் மட்டும் ஒப்படைக்க வேண்டும். * தினமும் 100 கிலோவுக்கு மேல் கழிவு உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், ஓட்டல்கள், திருமண மண்டபங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலை நிறுவனங்கள் தங்கள் வளாகத்திலேயே உரம் தயாரிக்க வேண்டும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் மூலம் உரிய கட்டணம் செலுத்தி அகற்ற வேண்டும். தவறும் பட்சத்தில் கடும் அபராதம் விதிக்கப்படும். * இறைச்சிக் கழிவுகளைப் பொது இடங்களில் வீசக்கூடாது. அவற்றை மாநகராட்சியால் அங்கீகரிக்கப்பட்ட 'விக்கி டிரேடர்ஸ்' என்ற நிறுவனத்திடம் மட்டுமே ஒப்படைக்க வேண்டும். தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட கடைக்கு 'சீல்' வைப்பதோடு, கடும் அபராதமும் விதிக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். திடக்கழிவு மேலாண்மையில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருகிறது. இதையடுத்து சுகாதார பிரிவினர் தங்கள் பகுதிகளில் இது குறித்த கண்காணிப்பை மேற்கொண்டுள்ளனர். புகார் அளிக்கலாம் பொதுமக்கள் திடக்கழிவு மேலாண்மை, சுகாதாரம் உள்ளிட்ட மாநகராட்சி சேவைகள் தொடர்பான புகார்களைப் புகைப்படத்துடன் பதிவு செய்ய 'நம்ம திருப்பூர்' என்ற பெயரில், மொபைல் போன் செயலி பயன்பாட்டில் உள்ளது. மேலும் 1800 425 7023 என்ற கட்டணமில்லா எண்ணிலும் புகார்களைத் தெரிவிக்கலாம். துாய்மையான திருப்பூரை உருவாக்க அனைவரும் மாநகராட்சி நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கமிஷனர் அமித் கேட்டுக் கொண்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்