மேலும் செய்திகள்
சத்துணவு ஊழியர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
30-Jan-2025
திருப்பூர்; தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி, அரசு ஊழியர்கள், கலெக்டர் அலுவலக நுழைவாயில்முன், நேற்று காலை முதல் தர்ணா போராட்டத்தை துவக்கினர்.தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், 24 மணி நேர தர்ணா போராட்டம் அறிவிக்கப்பட்டது. திருப்பூர் கலெக்டர் அலுவலக நுழைவாயில் முன், நேற்று காலை முதல் அரசு ஊழியர்கள் தர்ணாவை துவக்கினர். ஷாமியானா பந்தல் அமைத்து, அமர்ந்துள்ளனர். சமையலுக்கு அரிசி மூட்டைகள், தக்காளி, கத்தரி, கேரட், புடலை, வெண்டை, பச்சை மிளகாய், பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகளை பந்தலுக்குள் வைத்துள்ளனர். டிரம்ஸ் இசையுடன் தர்ணா துவங்கியது.தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ராணி தலைமை வகித்தார். துணை தலைவர் மதன்குமார் வரவேற்றார். மாநில துணை தலைவர் அம்சராஜ் உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.தமிழக அரசு ஊழியர்களுக்கு புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்துதல்; சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர், ஊர்ப்புற நுாலகர் உள்ளிட்டோருக்கு காலமுறை ஊதியம், ஓய்வூதியம் வழங்குதல்; சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை, கோர்ட் உத்தரவுப்படி, பணிக்காலமாக முறைப்படுத்துதல்; அரசுத்துறையில் காலிப்பணியிடங்களில், காலமுறை ஊதிய நடைமுறையில் இளைஞர்களை பணி அமர்த்துதல்; காலை சிற்றுண்டி திட்டத்தை அனைத்து அரசு பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தி, சத்துணவு ஊழியர்களை கொண்டு செயல்படுத்துதல்; ஊதிய மாற்றம் மற்றும் அகவிலைப்படியை நிலுவையுடன் வழங்குதல் உள்பட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:தமிழக முதல்வர், கடந்த நான்கு ஆண்டுகளில், அரசு ஊழியர்களின் எவ்வித கோரிக்கைகளையும் நிறைவேற்றவில்லை.தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகளை மறந்துவிட்டார். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றித்தரக்கோரி, அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் 24 மணி நேர தர்ணா போராட்டம் இன்று காலை, 10:00 மணி வரை தொடரும்.
30-Jan-2025