திருப்பூர்:தொழிலாளர் நலவாரிய விண்ணப்ப பதிவுகளுக்கு, ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வசதியாக, உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது.தொழிலாளர் நலத்துறையில், வாரிய உறுப்பினர்கள், பயன்கள் வேண்டி விண்ணப்பிக்கின்றனர். 'ஆன்லைன்' விண்ணப்பங்களை, தனியார் அமைப்பு சென்னையில் பராமரிக்கிறது. சென்னை புயல்மழை நேரத்தில், சர்வர் கோளாறு ஏற்பட்டு, அனைத்து விண்ணப்ப விவரமும் அழிந்துவிட்டதாக, தொழிற்சங்கங்கள் குற்றம்சாட்டியிருந்தன.நிலுவை விண்ணப்பங்களுக்கு தேவையான ஆவணங்களை, வாரிய இணையளத்தில் பதிவேற்றம் செய்யலாம் என, தொழிலாளர் நலத்துறை அறிவித்துள்ளது.தமிழ்நாடு கட்டுமானம், அமைப்புசாரா மற்றும் ஆட்டோ டிரைவர் தானியங்கி மோட்டார் வாகனம் பழுதுபார்க்கும் தொழிலாளர் நலவாரியத்தில், பதிவு செய்தல், புதுப்பித்தல், கல்வி, திருமணம், மகப்பேறு, கண் கண்ணாடி, இயற்கை மரணம், ஈமச்சடங்கு, விபத்து மரணம், ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், வீட்டு வசதி திட்டங்கள் உள்ளன.விண்ணப்பங்களுடன் இணைக்கப்பட்ட ஆவணங்கள், வாரியத்தின் சர்வர் பழுதால் இழப்பு ஏற்பட்டது. எனவே, 2023 டிச., 3 ம் தேதிக்கு முன், விண்ணப்பம் செய்து, நிலுவையில் இருந்த விண்ணப்பதாரர், தங்களது ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.ஆவணங்களை, இணையதளம் வாயிலாக பதிவேற்றம் செய்ய, திருப்பூர் தொழிலாளர் உதவி கமிஷனர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில், உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது.எனவே, உதவி மையத்தை அணுகி, ஆவணங்களை பதிவேற்றம் செய்யலாம் என, தொழிலாளர் துறை அலுவலகம் அறிவித்துள்ளது.