திருப்பூர்: : நாளை மலரும், 2026ம் ஆண்டில் அமெரிக்க விவகாரம் சுமூக தீர்வை எட்டும்; திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் மீண்டும் எழுச்சி பெறும் என, தொழில்துறையினர் நம்பிக்கையுடன் புத்தாண்டை வரவேற்க தயாராகி விட்டனர். கொரோனா பெருந்தொற்றுக்கு பின், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலையை தொடர்ந்து, 2024ம் ஆண்டு திருப்பூர் ஆயத்த ஆடைக்கு நல்ல காலம் பிறந்தது; ஏற்றுமதி 38 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்து, 2024-25ல், 44 ஆயிரத்து, 747 கோடி ரூபாயாக உயர்ந்தது; அதிடீரென அதிகரித்த வர்த்தக வாய்ப்புகளால் மறுமலர்ச்சியை நோக்கி இந்தியா பயணித்தது கடந்த 2025 ஜன. மாதம் டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின், இந்தியாவுக்கு 50 சதவீதம் வரி விதிக்கப்பட்டது. ஏற்றுமதி வர்த்தக வாய்ப்பை பெற, நீண்ட நாள் போராடிய ஏற்றுமதியாளர்கள், வரி உயர்வை பகிர்ந்துகொண்டு வர்த்தகத்தை தொடர்ந்தனர். திருப்பூரை பொறுத்தவரை, 40 சதவீதம் அளவுக்கு அமெரிக்காவுக்கு ஏற்றுமதி நடக்கறது. ஏற்றுமதி வர்த்தக பங்களிப்பு அதிகம் என்பதால், வரி விதிப்பால் ஏற்றுமதியாளர்கள் அதிகம் கஷ்டப்பட்டனர். இரண்டாம் நிலை வரி, 25 சதவீதத்தை, தங்களது வர்த்தகர்களுடன் பகிர்ந்து கொண்டனர். அதாவது, பெரும் நஷ்டத்தால் முடங்க வேண்டாம்; குறைந்த நஷ்டத்துடன் வர்த்தக உறவை தொடரலாம் என்று, இன்றளவும் இயங்கிக்கொண்டிருக்கின்றனர். வரிச்சலுகை எப்போது? இந்தியா - அமெரிக்கா இடையே, வர்த்தக ஒப்பந்தம் உருவாக்கும் பேச்சுவார்த்தை, சுமூகமாக நடந்து வருகிறது. இருப்பினும், ஏற்றுமதியாளரும், இறக்குமதியாளரும் கடும் நெருக்கடி நிலையில் சிக்கியுள்ளனர். இந்தவாரம், அடுத்தமாதம் என, நாட்கள் கடந்து, ஐந்து மாதங்கள் நிறைவடைந்தும், பேச்சுவார்த்தையில் தீர்வு கிடைக்காமல், ஆர்டர்கள் தேக்கமடைய துவங்கியுள்ளன. அமெரிக்காவுடன் வர்த்தகம் தொடர்வது சிரமம் என்று உணர்ந்த சிலர், மற்ற நாடுகளுடன் வர்த்தகம் செய்ய முயற்சித்து வருகின்றனர். பிரிட்டன், ஓமன், நியூசிலாந்துடன் ஒப்பந்தம் கையெழுத்தானாலும், அதற்கான பயன் கிடைக்க, மேலும் ஆறு மாதங்களாகும். ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பந்தம் ஏற்பட்டாலும், ஓராண்டுக்கு பின்னரே வரிச்சலுகை கிடைக்கும். எனவே, அமெரிக்காவுடன் விரைந்து ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதே, அனைவரின் எதிர்பார்ப்பு. இல்லாதபட்சத்தில், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தாக்குப்பிடிக்குமா என்பது, மில்லியன் டாலர் கேள்வி. அமெரிக்க ஏற்றுமதியாளர்கள், திடீரென மற்ற நாடுகளுடன் வர்த்தகம் செய்ய முயற்சிப்பதால், ஏற்கனவே வர்த்தகம் செய்து வந்த ஏற்றுமதியாளர் பாதிக்கப்படவும் வாய்ப்புள்ளது. எனவே, எல்லா பிரச்னைக்கும் ஒரே தீர்வு, அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் விரைந்து நிறைவேற்றப்பட வேண்டும் என்பதுதான். நம்பிக்கை தானே வாழ்க்கை... (படம் வைக்கவும்) கடந்த, 2025 ம் ஆண்டு பல்வேறு ஏற்றங்களையும், கடுமையான சவால்களையும் கொடுத்துள்ளது. வரும், ஜன., மாதத்துக்குள், அமெரிக்காவுடன் சுமூக வர்த்தக ஒப்பந்தம் உருவாக்கப்பட வாய்ப்புள்ளது. அவ்வாறு, வர்த்தக ஒப்பந்தம் உருவாகும் போது, 2026ம் ஆண்டு வெற்றிகரமான ஆண்டாக அமையும். கடந்த சில மாதங்களில் ஏற்பட்ட இழப்புகளை, விரைவில் ஈடுகட்டவும் வாய்ப்பாக அமையும். திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தை பொறுத்தவரை, அமெரிக்க வரி உயர்வால் ஏற்பட்ட பாதிப்புகளை தணிக்க தொடர்ந்து முயற்சித்த வருகிறது. மத்திய அரசிடம் பல்வேறு கோரிக்கை வைத்துள்ளது. குறிப்பாக, அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் உருவாகும் வரை, திருப்பூர் ஏற்றுமதி வர்த்தக நலன்குருதி, 'போக்கஸ் மார்க்கெட்' திட்டத்தில், அமெரிக்க ஏற்றுமதியாளருக்கு மட்டுமு், 20 சதவீத ஊக்கத்தொகை வழங்கி, தொழிலை பாதுகாக்க வேண்டும். புதிதாக ஒப்பந்தம் ஏற்பட்டுள்ள புதிய நாடுகளுடன் வர்த்தகம் செய்ய ஏதுவாக, தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சந்தை வாய்ப்புகளை பெருக்க, கண்காட்சிகள் நடத்தப்பட வேண்டும். ஆகமொத்தம், திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதிக்கு, வரும், 2026ம் ஆண்டு, ஏற்றம் மிகுந்த ஆண்டாக அமையும் என்றே நம்புகிறோம். - குமார் துரைசாமி திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க இணை செயலாளர்