உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  மாவட்டத்தில் எவ்வளவு வாக்காளர்கள் நீக்கம்? இன்று வரைவுப்பட்டியல் வெளியீடு

 மாவட்டத்தில் எவ்வளவு வாக்காளர்கள் நீக்கம்? இன்று வரைவுப்பட்டியல் வெளியீடு

திருப்பூர்: எஸ்.ஐ.ஆர்., கணக்கீடு பணிகள் முடிவடைந்த நிலையில், திருப்பூர் மாவட்டத்தின் எட்டு சட்டசபை தொகுதிகளுக்கான வாக்காளர் வரைவு பட்டியல், இன்று வெளியாகிறது. திருப்பூர் மாவட்டத்தில், அக். 27ம் தேதி நிலவரப்படி, மொத்தம் 24 லட்சத்து 44 ஆயிரத்து 929 வாக்காளர்கள் பட்டியலில் இடம்பெற்றிருந்தனர். தமிழகம் முழுவதும், தேர்தல் கமிஷன் அறிவித்த எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தக் கணக்கீடு, கடந்த நவ. 4ல் துவங்கி இம்மாதம் 14ம் தேதி வரை நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்தின் எட்டு தொகுதிகளில், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், வீடு தேடிச் சென்று, வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவம் வழங்கி, பூர்த்தி செய்து பெற்றனர். அவ்விண்ணப்பங்கள், ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டு, அந்தந்த தொகுதி வாக்காளர் பதிவு அலுவலர்களால் சரிபார்க்கப்பட்டுள்ளது. இறந்தவர்கள், இரட்டை பதிவு வாக்காளர், நிரந்தரமாக இடம் பெயர்ந்தோர், கணக்கீடு படிவம் பூர்த்தி செய்து சமர்ப்பிக்காதவர்கள் பெயர்கள் நீக்கப்பட்டு, எட்டு சட்டசபை தொகுதிகளுக்கான வாக்காளர் வரைவு பட்டியல் தயாராகியுள்ளது. தொகுதிவாரியாக, வரைவு பட்டியல் பிரின்ட் எடுக்கும் பணிகள் நேற்று நடைபெற்றன. தேர்தல் கமிஷன் அறிவித்தபடி, எட்டு தொகுதிகளுக்கான வாக்காளர் வரைவு பட்டியலை, மாவட்ட தேர்தல் அலுவலர் மனிஷ் நாரணவரே இன்று வெளியிடுகிறார். கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், மாலை, 3:00 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில், வரைவு பட்டியல் வெளியிடப்படுகிறது. பார்வையிட தவறாதீர் இன்று வெளியிடப்படும் வாக்காளர் வரைவு பட்டியல் நகல், திருப்பூர் கலெக்டர் அலுவலகம், மாநகராட்சி அலுவலகம், ஆர்.டி.ஓ., அலுவலகம் உள்பட அந்தந்த சட்டசபை தொகுதி வாக்காளர் பதிவு அலுவலகங்கள்; உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படுகிறது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கும் வழங்கப்படுகிறது. புதிதாக இணையலாம் தீவிர திருத்தம் நடைபெற்றுள்ளதால், வாக்காளர் ஒவ்வொருவரும், பட்டியலில் தங்கள் பெயர், குடும்பத்தினரின் பெயர் உள்ளதா என சரிபார்த்துக்கொள்ளவேண்டும். படிவம் பூர்த்தி செய்து வழங்கியும் பெயர் நீக்கப்பட்டிருப்பின், வாக்காளர் பதிவு அலுவலரிடம் மேல் முறையீடு செய்யலாம். படிவம் பூர்த்தி செய்து வழங்காமல் பெயர் நீக்கம் செய்யப்பட்டோர், படிவம் - 6 பூர்த்தி செய்து கொடுத்து, புதிய வாக்காளராக இணையலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை