உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / விவசாய நிலங்களுக்கு மத்தியில் சட்டவிரோத கிராவல் மண் குவாரி

விவசாய நிலங்களுக்கு மத்தியில் சட்டவிரோத கிராவல் மண் குவாரி

உடுமலை:மடத்துக்குளம் தாலுகாவில், உரிய ஆவணங்கள் இல்லாமல் சட்ட விரோதமாக கிராவல் மண் கடத்தப்படுவதால், விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.மடத்துக்குளம் பகுதிகளில், உரிய ஆவணங்கள் இல்லாமலும், விதிமீறியும், கல்குவாரிகள், கிரசர் ஆலைகள் இயங்கி வருவதோடு, கனிம வளங்கள் சட்ட விரோதமாக கடத்தப்படுகின்றன.இந்நிலையில், விவசாய நிலங்கள், அரசுக்கு சொந்தமான நிலங்களில், சட்ட விரோதமாக கிராவல் மண் கடத்தலும் அமோகமாக நடக்கிறது. உடுமலை, பாப்பான்குளம் பிரிவு பகுதியில், விவசாய நிலங்களுக்கு மத்தியில், பல அடி ஆழத்திற்கு கிராவல் மண் எடுத்து, கடத்தப்படுகிறது.கனிம வளத்துறை அனுமதியின்றியும், வாகனங்களில் எடுத்துச்செல்ல 'பர்மிட்' இல்லாமலும், பகல் மற்றும் இரவு நேரங்களில், 50க்கும் மேற்பட்ட லாரிகளில், கிராவல் மண் எடுத்து, பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படு கிறது. விவசாய நிலங்களுக்கு மத்தியில், 20 அடி ஆழத்திற்கு மேல், கிராவல் மண் வெட்டி எடுப்பதால், சுற்றிலும் உள்ள விவசாய நிலங்கள் பாதிப்பதோடு, நிலத்தடி நீரும் பாதிக்கும்.இதனால், சுற்றிலும் உள்ள பல நுாறு ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு, தென்னை, கரும்பு உள்ளிட்ட பயிர்கள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சட்ட விரோதமாக நடக்கும், கனிமவளத் திருட்டை தடுக்க வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும், என, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ