விதிமீறி சரக்கு வாகனங்கள் நிறுத்தம்; விபத்து அதிகரிப்பு
உடுமலை: உடுமலை, தாராபுரம் ரோட்டில், விதிமுறை மீறி சரக்கு வாகனங்கள் நிறுத்தப்படுவதால், விபத்துகள் அதிகரிக்கின்றன. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். உடுமலை, தாராபுரம் ரோட்டில் நாள்தோறும் நுாற்றுக்கும் அதிகமான வாகனங்கள் கடந்து செல்கின்றன. போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், விபத்துகளை கட்டுப்படுத்தவும், ரோடு விரிவாக்கப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. வாகனங்கள் சீராக செல்வதற்கு, தடுப்புச்சுவரும் அமைக்கப்பட்டுள்ளது. விரிவுபடுத்தப்பட்ட ரோட்டின் பாதி வரை, மணல் பரவி இருப்பதால், வாகன ஓட்டுனர்கள் செல்வதற்கு குறுகிய இடைவெளி மட்டுமே உள்ளது. ரோட்டோரத்திலுள்ள தனியார் நிறுவனங்களுக்கு சரக்குகளை இறக்குவதற்கு, சரக்கு லாரிகளும் பாதி ரோட்டை ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன. இரவு நேரத்தில் இவ்வாறு நிறுத்தப்படும் சரக்கு வாகனங்களால் மற்ற வாகன ஓட்டுனர்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர். அனுமதியில்லாமல் விதிமுறை மீறி நிறுத்தப்படும் வாகன உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.