திருப்பூர்: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், பல கோடி ரூபாய் மதிப்பில் கட்டி, முதல்வர் திறந்து வைத்த வணிக வளாகம் திறக்கப்படாமல் வீணாக கிடக்கிறது.திருப்பூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. பெரும்பாலான பணிகள் நிறைவு பெற்றுள்ளன. அவ்வகையில், பி.என்., ரோடு பிச்சம்பாளையத்தில், உள்ள புது பஸ் ஸ்டாண்ட் முன்புறம் 31 கோடி ரூபாய் மதிப்பில் வணிக வளாகம் கட்டுமானப் பணி நிறைவு பெற்று, கடந்த 5ம் தேதி திறக்கப்பட்டது. சென்னையிலிருந்து காணொலி காட்சி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.இந்த வளாகம் புதிய வடிவமைப்பில் வணிக வளாக கடைகள் மற்றும் தரைத் தளத்தில் வாகன பார்க்கிங் வளாகத்துடன் அமைந்துள்ளது. சோலார் மின் உற்பத்தி பேனல்கள்; கண்காணிப்பு கேமராக்கள், கழிப்பிடம்; தாய்மார்கள் பாலுாட்டும் அறை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ஆகியவற்றுடன் அமைக்கப்பட்டுள்ளது.இந்த வணிக வளாகம் கட்டி முடித்து திறக்கப்பட்ட நிலையிலும், இதில் கடைகள் திறக்கப்படாமல் வீணாகக் கிடக்கிறது. கட்டுமானப் பணி நிறைவடைந்த நாள் முதல் இவற்றுக்கான டெண்டருக்கு அழைப்பு விடுத்தும், இது வரை யாரும் ஏலம் கோர முன் வராத காரணத்தால், பயன்பாட்டுக்கு வராமல் வீணாகி வருகிறது.மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:பஸ் ஸ்டாண்ட் வணிக வளாகம் இதுவரை பல முறை ஏலம் நடப்பதாக அறிவித்தும் ஏலத்தில் யாரும் பங்கேற்க வரவில்லை. இன்று (19ம் தேதி ) மாநகராட்சிக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் வணிக வளாகங்களில் காலியாக உள்ள கடைகளுக்கு ஏலம் நடக்கவுள்ளது. இந்த முறையும் இதற்கான ஏலம் கோரப்படவில்லை என்றால் மாற்று நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினார்.
பனியன் மார்க்கெட் வருமா?
திருப்பூர் புது பஸ் ஸ்டாண்ட் வணிக வளாகத்தில் ஏற்கனவே பல்வேறு கடைகள் காலியாக உள்ளன. இதற்கு முக்கிய காரணம் இங்கு வந்து திரும்பும் பஸ்கள் எண்ணிக்கை குறைவு. மேலும், அவிநாசி வழியாக கோவை, மேட்டுப்பாளையம், சத்தி பகுதிகளுக்கும், பெருமாநல்லுார் வழியாக கோபி, காங்கயம் வழி திருச்சி செல்லும் பஸ்கள் மட்டுமே வந்து செல்கின்றன. இந்த பஸ்களுக்கு வரும் பயணிகள் அதிகளவில் இங்கு வந்து பஸ் ஏறுவதில்லை.திருப்பூர் புஷ்பா சந்திப்பு பகுதியில், ஆம்னி பஸ்கள் புக்கிங் மையங்களும், பயணிகள் 'பிக் அப்'பும் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் அங்கு பல நேரங்களில் பெரும் நெருக்கடி நிலவுகிறது. இந்த ஆம்னி பஸ்கள் இயக்கத்தை புது பஸ் ஸ்டாண்ட் வளாகத்துக்கு மாற்றலாம்.கடைகளும் செயல்படும்; பயணிகளும் சிரமமின்றி செல்லலாம். இந்த வளாகம் முழுமையான இயக்ககத்துக்கு வரும். அதே போல், புதிய வணிக வளாகம் பெரிய அளவிலான சூப்பர் மார்க்கெட் நிறுவனத்துக்கு ஒட்டு மொத்தமாக குத்தகைக்கு விடலாம். திருப்பூரில் முக்கியமாக இயங்கி வரும் பனியன் மார்க்கெட் கடைகள் இங்கு திறக்கப்பட்டாலும் வளாகம் முழுமையாகப் பயன்பாட்டுக்கு வரும். பல தரப்பினரும் பயன்பெறும் வாய்ப்பு உள்ளது.