துாய்மை பணியாளர்களுக்கு சட்ட விழிப்புணர்வு முகாம்
திருப்பூர்; மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் திருமுருகன்பூண்டியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, விழுதுகள் அமைப்பு ஆகியன இணைந்து, துாய்மைப் பணியாளர்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாமை நடத்தின. திருமுருகன்பூண்டியில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்த முகாமில், திட்ட ஒருங்கிணைப்பாளர் சந்திரா வரவேற்றார்.விழுதுகள் அமைப்பின் இயக்குநர் தங்கவேலு முன்னிலை வகித்தார். சட்டப் பணிகள் ஆணைக்குழு வக்கீல் கவுதம் பாரதி, இலவச சட்ட உதவி மையத்தின் நோக்கம் மற்றும் செயல்பாடு குறித்து பேசினார்.முகாமுக்கு தலைமை வகித்து நீதிபதி ஷபீனா பேசியதாவது:இன்று உலகம் முழுவதும் பல்வேறு தொற்று நோய்கள் பரவி வருகின்றன. இதனால் பல தரப்பினரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இதிலிருந்து காப்பாற்றும் விதமாக, துாய்மைப்பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். உலகத்தை காக்கும் கரங்களாக உள்ள துாய்மைப் பணியாளர்களை பாதுகாக்கும் வகையில் சட்டப் பிரிவுகள் உள்ளன.சட்டப் பணிகள் ஆணைக்குழு உங்களுக்கு சேவை செய்ய காத்திருக்கிறது. தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் கட்டணமில்லா தொலைபேசி எண் 15100 உள்ளது. துாய்மைப் பணியாளர்கள் தங்கள் சட்ட ஆலோசனைகள் மற்றும் சட்டரீதியான பாதுகாப்புக்கு இந்த எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் பேசினார்.திட்ட ஒருங்கிணைப்பாளர் கோவிந்தராஜ் நன்றி கூறினார்.