உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / எழுதலாம் துடிப்புடன்... வெல்லலாம் எதிர்காலத்தை!

எழுதலாம் துடிப்புடன்... வெல்லலாம் எதிர்காலத்தை!

பொதுத்தேர்வுகள் மாணவர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை; எதிர்காலத்திற்கான அடித்தளமாகவும் அவை அமைகின்றன. பொதுத்தேர்வுகளை சிறப்பாக எழுத மாணவர்கள் துடிப்புடன் தயாராக வேண்டியது அவசியமாகிறது.பத்து, பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்னும் சில நாட்களில் துவங்கவுள்ள நிலையில், மாணவர்களை தேர்ச்சி பெறச் செய்யவும், பள்ளி அளவில் நுாறு சதவீதம் தேர்ச்சியை பதிவு செய்யும் நோக்கிலும், பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.மாணவ, மாணவியரின் உயர்கல்வி, அதுசார்ந்த வேலை வாய்ப்புக்கு அடித்தளமாக அமையவிருக்கிற பொதுத்தேர்வு விரைவில் நடத்தப்பட இருக்கிறது. அடுத்த மாதம், 26ல், பத்தாம் வகுப்பு; 4ம் தேதி, 11ம் வகுப்பு; மார்ச் முதல் தேதி, 12ம் வகுப்பு பொது தேர்வு நடத்தப்படுகிறது. தேர்வை பொறுப்புடன் எழுதி, மதிப்பெண்களை அள்ளிக் குவிக்க மாணவ, மாணவியரை ஆசிரியர்கள் தயார்படுத்தி வருகின்றனர். அதேநேரம், பொதுத் தேர்வில், நுாறு சதவீதம் தேர்ச்சியை பதிவு செய்வது என்பது, பள்ளிகளின் அந்தஸ்து சார்ந்த விஷயமாகவும் மாறிப்போயிருக்கிறது.சிறப்பு வகுப்பில் கவனம் பெரும்பாலான தனியார் பள்ளிகள், 9ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியருக்கு, அந்தாண்டின், டிச., மாதத்தில் இருந்தே, 10ம் வகுப்புக்கான பாடங்களை கற்பிக்க துவங்கி விடுகின்றனர்.10, 11, மற்றும், 12ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு, மாலை நேரங்களில், 6:00 மணி வரை கூட சிறப்பு வகுப்பெடுக்கின்றனர்.தேர்வு நெருங்கும் சமயத்தில், ஞாயிறன்று கூட, பள்ளிகளுக்கு மாணவ, மாணவியரை வரவழைத்து, சிறப்பு வகுப்பெடுத்து, கற்பித்து முடித்த பாடங்களை மறு நினைவூட்டல் செய்ய வைத்து, வகுப்பு தேர்வு நடத்தி, அவர்களின் மதிப்பெண் பெறும் திறமையை பரிசோதிக்கின்றனர்.படிப்பில் மட்டும் நாட்டம் பள்ளிகளில் ஆண்டு விழா, விளையாட்டு விழா என, அவ்வப் போது பள்ளிகளில் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது; இதற்கு மாணவ, மாணவியர் பயிற்சிக்காக சில மணி நேரங்களை செலவிட வேண்டியிருப்பதால், 'படிப்பு பாதிக்கும்' என்பதால், இத்தகைய நிகழ்ச்சிகளில் பங்கெடுப்பதை, பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் 'தியாகம்' செய்து, படிப்பில் மட்டும் நாட்டம் செலுத்துகின்றனர்.பொது தேர்வில் கேட்கப்படும் முக்கியமான வினாக்களை தேர்வு செய்து, மாணவர்களுக்கு வழங்கும் ஆசிரியர்கள், அந்த வினாக்களை நல்ல முறையில் படிக்க, மாணவர்களுக்கு அறிவுரை வழங்குகின்றனர்.'கரை சேர்ப்பதில்' கஷ்டம்ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:ஒன்று முதல், 9ம் வகுப்பு வரை 'ஆல் பாஸ்' என்ற நடைமுறையை கல்வித்துறை பின்பற்றுகிறது. இதனால், நன்றாக படிக்கும் மாணவர்கள், சுமாராக படிக்கும் மாணவர்கள் என அனைவரும், 10ம் வகுப்புக்குள் நுழைகின்றனர்; பொதுத் தேர்வை எதிர்கொள்கின்றனர். அவர்கள் அனைவரையும் ஒரு சேர 'கரை சேர்ப்பது' என்பதுதான், ஆசிரியர்களுக்கான சவாலாக மாறியிருக்கிறது. நன்றாக படிக்கும் மாணவர்களை பள்ளி தர வரிசையில் முதலிடத்துக்கு கொண்டு வருவது; சுமாராக படிக்கும் மாணவர்களை, 50 சதவீதத்துக்கும் மேல் மதிப்பெண் பெறச் செய்வது; கல்வியில் மிக பின்தங்கிய மாணவர்களை எப்படியாகிலும் 'பாஸ் மார்க்' வாங்கச் செய்வது, என்ற மனநிலையில் தான் செயல்பட வேண்டியிருக்கிறது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.மவுசு பெறும் 'ேஹாம் டியூஷன்'பள்ளிகள், கல்வியில் சற்றே பின்தங்கியுள்ள மாணவ, மாணவியர் மீது தனி கவனம் செலுத்தினாலும், சில பள்ளிகள், அவர்களை கரை சேர்க்க வேண்டிய பொறுப்பை, பெற்றோரிடம் ஒப்படைக்கின்றனர். அதன் விளைவு, பெற்றோர் பலர், திறமையான ஆசிரியர்களை அடையாளம் கண்டு, அவர்களை தங்கள் வீடுகளுக்கே வரச் செய்து, 'ேஹாம் டியூஷன்' எடுக்க வைக்கின்றனர். சில ஆசிரியர்கள் ஒரு மணி நேரத்துக்கு, 300 முதல், 400 ரூபாய் வரை கூட'டியூஷன்' கட்டணம் பெறுகின்றனர்; மாணவர்களை தேர்ச்சி பெறவும் செய்து விடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ