'மாவட்ட ஊராட்சி தி.மு.க., பெண் கவுன் சிலர் கொதிச்சிப்போயிட் டாராம்...''சித்ரா சொன்னதும், ஆர்வமானாள் மித்ரா.''மித்து... மாவட்ட ஊராட்சி கவுன்சில்ல, அ.தி.மு.க., தான் பெரும்பான்மையா இருக்குது. கடந்த 2020ல் புது கவுன்சில் அமைஞ்ச உடனே, மாவட்ட கவுன்சிலர்கள் சேர்ந்து 'குரூப் போட்டோ' எடுத்தாங்க... அப்போ, அ.தி.மு.க., ஆட்சி நடந்ததால பேக்கிரவுண்ட்ல, ஜெயலலிதா, இ.பி.எஸ்., படம் இருந்துச்சு...''அப்புறம், அ.தி.மு.க., பெண் கவுன்சிலர் ஒருத்தங்க இறந்துட்டாங்க... அந்த இடத்துல தி.மு.க., ஜெயிச்சுது... குரூப் போட்டோவில், புதிய பெண் கவுன்சிலரோட படத்தைச் சேர்த்தாங்க... ஆனா பேக்கிரவுண்ட் படம் மாறல...''புது கவுன்சிலர் டென்ஷன் ஆயிட்டாங்களாம்... மாவட்ட ஊராட்சி கவுன்சில் செயலர்ட்ட நேரா போய், 'இப்ப எங்க ஆட்சி நடக்குது... இந்த போட்டோவ எப்படி வீட்ல மாட்டி வைக்க முடியும்னு பொறிஞ்சு தள்ளிட்டாங்களாம்''''அவங்க கேட்கறதுல நியாயம்தானே''''ஆனா கவுன்சில் செயலர், 'மறுபடி குரூப் போட்டோ எடுக்க முடியாது. வேணும்னா நீங்க ஆல்டர் பண்ணிக்குங்க'ன்னு சொல்லிட்டு முடிச்சிட்டாராம்...''''சித்ராக்கா... இப்படி போட்டோல ஒட்டுப்போடறதே தப்புத்தானே''தலையசைத்தாள் சித்ரா. 'முன்னணி' எப்படி?
''சித்ராக்கா... அரசு கேபிள் நிறுவனம் மூலமா 'லோக்கல்' சேனல்களுக்கு இணைப்பு வழங்குறாங்க. பத்து உள்ளூர் சேனல் ஒளிபரப்பாகுதாம். அதுல நாலு மட்டும்தான் தொகையை முறையா செலுத்தியிருக்காங்களாம்...''ஆனா, இஷ்டம் போல் சேனல்கள் எந்தவிதமான அனுமதியும் இல்லாம நடத்துறாங்களாம். அதி காரிகளை முறையாக கவனிச்சா போதும், கேபிள் இணைப்பு வரிசைல முன்னணிக்குப் போயிடலாம்னு பேசிக்கிறாங்க...''''மித்து... செம வசூல்போல...'' தீராத 'லடாய்'
''அக்கா... ஆளும்கட்சில 'சாமி'யான அமைச்சருக்கும், 'செல்வ'மான எம்.எல்.ஏ.,வுக்கும் ஏழாம் பொருத்தம்; எம்.எல்.ஏ., நிகழ்ச்சில அமைச்சரும், அமைச்சர் நிகழ்ச்சில எம்.எல்.ஏ.,வுக்கும் கலந்துக்கிறதில்ல...''''மித்து... இதுதான் ஊருக்கே தெரியுமே...''''மோதல் போக்கால் லோக்சபா தேர்தல்ல பாதிக்கப்படுவோம்னு கட்சிக்காரங்க புலம்புறாங்க... தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு திருப்பூர் வருதாம். குழுவைச் சந்தித்து திருப்பூர் மாவட்டத்துக்குன்னு பொறுப்பு அமைச்சர் நியமிக்கணும்னு எம்.எல்.ஏ., தரப்பு மனு கொடுக்கறதா பேசிக்கிறாங்கக்கா... இது அமைச்சரை 'கட்டம்' கட்ட உதவுற தந்திரமா இருக்கும்னு எம்.எல்.ஏ., தரப்பு நம்புதாம்'' போலீஸ் 'ஷாக்'
''மித்து... திருமுருகன்பூண்டி, ராக்கியாபாளையத்தில ஒருத்தரோட சரக்கு வாகனத்தை, அவரோட சகோதரர் எடுத்துட்டுப்போய் நிதி நிறுவனம் ஒண்ணுல அடகு வச்சிட்டார்; அந்த நிதி நிறுவனத்தை திடீர்னு பூட்டீட்டாங்க. பாதிக்கப்பட்டவர் வாகனத்தை மீட்டுத்தரணும்னு பூண்டி ஸ்டேஷன்ல புகார் கொடுத்தாலும், ஆறு மாசமாக, வழக்கு பதிவு செய்யாம போலீஸ்ல இழுத்தடிச்சிட்டாங்க...''கமிஷனர்ட்ட புகார் கொடுத்த பின்புதான் வழக்கு பதிவு செஞ்சாங்க... ஆனாலும், வாகனத்தை மீட்டுத்தரல... கடந்த வாரம், ஸ்டேஷன் முன்னாடி, புகார்தாரரோட தாய் அழுது புரண்டு அலப்பறை பண்ணீட்டாராம்...''வண்டிய கொடுத்தாதான் நகர்வேன்னு அடம் பிடிச்சதால போலீசார் 'ஷாக்' ஆயிட்டாங்க... இன்ஸ்பெக்டரும், உதவி கமிஷனரும் வாகனத்தை சீக்கிரமே மீட்டுத்தந்துடறோம்னு சமாதானப்படுத்தின பிறகுதான், அவரு அங்கிருந்து நகர்ந்தாராம்'' பதறிய பக்தர்கள்
''சித்ராக்கா... அவிநாசி கோவில் கும்பாபிேஷக விழாவுல ஏகப்பட்ட சொதப்பல்... வி.ஐ.பி.,க்களே குழம்பிட்டாங்க... திருப்பூர் மேயர், வடக்கு எம்.எல்.ஏ., இன்னும் சில பேரு வழிமாறி ராஜகோபுரம் இருந்த இடத்துக்கு வந்துட்டாங்க...''மூன்றடி உயர சுவர்ல ஏறி, அங்கிருந்து சின்ன கோபுரம் மீது தாவி, படியில் இறங்கி போக வேண்டியிருந்துச்சாம். மூலவர் விமானம் அருகில் போகற ஆர்வத்துல அப்படிப் போயிருக்காங்க... அப்புறம்தான் தெரிஞ்சுது... முந்தைய நாள் கும்பாபிேஷகம் நடந்த காலபைரவர் கோபுர கலசத்தைப் பிடிச்சு ஏறியிருக்காங்கன்னு... பக்தர்கள் பதறீட்டாங்களாம்''''மித்து... கோவில்ல மண்டல பூஜை 48 நாள் நடக்குது... கட்டளைதாரர் ஒருத்தருக்கு 20 ஆயிரம் ரூபாய்ன்னு நிர்ணயிச்சிருக்காங்க... பூஜைக்குன்னு அஞ்சாயிரம், மீதியுள்ளதை நன்கொடைன்னு வரவு வைக்கிறாங்களாம். இவ்ளோ வசூல் நடந்தாலும்கூட, குடிநீர், நிழலில் நிற்க செட், பந்தல்னு எந்த வசதியுமே பண்ணலேன்னு பக்தர்கள் குமுறுறாங்க...''கும்பாபிேஷக பாஸ் வினியோகத்துலயும் ஏகப்பட்ட குளறுபடி; உபயதாரர் அல்லாதவங்க என கோவிலுக்கு சம்பந்தமே இல்லாதவங்களுக்குகெல்லாம் பாஸ் கொடுத்தாங்கன்னு உள்ளூர் பக்தர்கள் புலம்புறாங்க...''''சித்ராக்கா... எல்லாம் அந்த அவிநாசியப்பருக்கே வெளிச்சம்'' அஞ்சாமல் வசூல்
''மித்து... கூட்டுறவுத்துறை தேர்வு எழுதி, நேர்காணலில் தேர்ச்சி அடைஞ்சவங்களுக்கு கூட்டுறவு சங்க உதவியாளராக பணி நியமனம் நடக்குது.இரண்டு கட்ட தேர்வில் தேர்ச்சி பெற்றாலும், வீட்டுக்கு அருகிலேயே போஸ்ட்டிங் போடணும்னா அஞ்சு லட்சம் எதிர்பார்க்கிறாங்களாம்.''பணம் கொடுக்காவிட்டால், அவிநாசியைச் சேர்ந்தவங்களை வேடம்பட்டிக்கும், சேவூரை சேர்ந்தவங்களை மடத்துக்குளத்துக்கும் நியமிக்கப்போறாங்களாம். கலெக்டர் தான் நேரடியா தலையிடணும்''சித்ரா வேதனைப் பட்டாள்.''சித்ராக்கா... ஸ்மார்ட் சிட்டி திட்டத்துல டவுன்ஹால் புனரமைச்சு, திறக்க ரெடியா இருக்க... டவுன் ஹாலுக்கு இடம் கொடுத்தது ரங்கசாமி செட்டியார். டவுன்ஹாலுக்கு வேறு பெயரை ஆளும்கட்சிக்காரங்க காய் நகர்த்துறாங்களாம்... தகவல் தெரிஞ்சு, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் மாவட்ட செயலாளரிடம் பேசிவிட்டு, ரங்கசாமி செட்டியார் பெயரையே சூட்டணும்னு மேயர்ட்ட மனு கொடுத்துருக்காங்களாம்... மத்த கட்சிகளும் இதே கோரிக்கையை விடுக்கிறதுனால ஆளும் கட்சிக்காரங்க என்ன பண்ணுவாங்கன்னு தெரியல...' 'சண்டே'ன்னா வராது
''மித்து... சண்டேன்னா, திருப்பூர் மாவட்ட எல்லையான செஞ்சேரிமலை அடுத்த வாகத்தொழுவு, வி.வேலுார், மோகனுார் கிராமங்களுக்கு டவுன் பஸ் இயக்கறதில்லையாம்... வழக்கமா ரெண்டு மணி நேரத்துக்கு ஒரு தடவ இயங்கற பஸ்கள், அன்னிக்கு காலைலயும், ராத்திரிலயும் ஒரு தடவை மட்டும்தான் வருதாம்.பஸ்கள் கோவை மாவட்டம், பொள்ளாச்சி டிப்போவில் இருந்து வருது அப்படீன்னு திருப்பூர், உடுமலை டிப்போ அதிகாரிங்க சொல்றாங்களாம். ஆறு முறை மறியல் நடந்தும் பஸ் வர்றதில்லை. மக்கள் படற திண்டாட்டத்துக்கு அளவே இல்லை''''சித்ராக்கா... திருப்பூர் குட்கா விற்பனை துாள் கிளப்புதாம். பில்லுல வேற பேரை போட்டு தைரியமா விக்கிறாங்களாம். ஒரு பாக்கெட் 50 ரூபாய்ல இருந்து 70 ரூபாய்க்கு விக்குதாம். ஒரிஜினல் விலை 20 ரூபாய்க்கும் குறைவாம். பாக்கெட்டுக்கு 50 ரூபா லாபம்''மித்ரா பெருமூச்சு விட்டாள். 'நங்கூர' அதிகாரிகள்
''மித்து... லோக்சபா தேர்தலையொட்டி இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்களை டிரான்ஸ்பர் செஞ்சிட்டு வர்றாங்க... சிட்டில, சில உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர் ஆண்டுக்கணக்கா ஒரே இடத்தில இருக்காங்க... மாவட்டத்தில் ஐந்து சப்-டிவிஷன்களுக்கு உட்பட்ட பகுதியில் எஸ்.ஐ.,கள இடம் மாத்தியும் மாத்துன இடத்துக்கு போகலியாம். வசூல்ல துாள் கிளப்பறாங்களாம்....''பல்லடத்தில 'டிவி' நிருபர் தாக்கப்பட்டதில, 11 பேரை அரெஸ்ட் பண்ணியிருக்காங்க... ஆனா தாக்குதலுக்கான காரணம் என்னங்கற விஷயம் மட்டும் மர்மமாவே இருக்குது... உயரதிகாரிகளும் மூச்சு விட மறுக்கிறாங்க...''''சித்ராக்கா... உண்மை பல நேரங்கள்ல வெளிச்சத்துக்கே வர்றதில்ல''மித்து விசனப்பட்டாள்.''கவலைப்படாதே மித்து... ஜில்லுன்னு வாட்டர் மெலான் ஜூஸ் போட்டுத்தர்றேன்... பீ கூல்''கலகலவென சிரித்தனர், இருவரும்.