பல்லடம்:பல்லடத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ள தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்திற்காக, பிரமாண்ட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொண்டு வரும், 'என் மண்; என் மக்கள்,' யாத்திரை நிறைவு விழா மற்றும் பிரதமர் மோடி பங்கேற்கும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம், திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகேயுள்ள மாதப்பூரில், வரும் 27ம் தேதி நடக்கிறது.இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள, 1,400 ஏக்கர் இடத்தில் முன்னேற்பாடு பணிகள் ஜரூராக நடக்கின்றன.   பிரதமர் பங்கேற்கும் பொதுக்கூட்ட மேடை, 80க்கு 60 அடி என்ற அளவில் கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டு, அதன் மீது இரும்பு பில்லர்கள் கொண்டு மேடை உருவாக்கப்பட்டு வருகிறது. ஒரே நேரத்தில், 5 லட்சம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையிலும், 10 லட்சம் பேர் வரை நின்று கொண்டு பங்கேற்கும் விதமாகவும், 250 ஏக்கர் பரப்பளவில், பொதுக்கூட்ட இடம் அமைக்கப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி பொதுக்கூட்ட மேடைக்கு வருவதற்கான பிரத்யேக வழித்தடம், ஹெலிபேடு, உணவுக்கூடம், பார்க்கிங் வசதி, வி.வி.ஐ.பி., மற்றும் வி.ஐ.பி.,களுக்கான பகுதி, பொதுக்கூட்ட அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு பணிகளும் துரித கதியில் நடக்கின்றன.மாநிலத் தலைவர் அண்ணாமலை, கோவையில் யாத்திரை மேற்கொண்டுள் ளார்.  பொதுக்கூட்ட தேதி நெருங்கி வருவதால், பிரதமர் பங்கேற்க உள்ள பொதுக்கூட்ட இடத்தை பார்வையிட அண்ணாமலை இன்று, பல்லடம் வர வாய்ப்புள்ளதாக நிர்வாகிகள் கூறினர்.
'முழு வெற்றி பெற செய்ய வேண்டும்'
பா.ஜ., மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம், பொதுச் செயலாளர் முருகானந்தம் ஆகியோர் கூறியதாவது:இந்திய அரசியலமைப்பின் சட்டப்பிரிவு 370, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து பெற வழிவகை செய்கிறது. இதை செயல்படுத்தி காட்டிய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, 1,333 பூத்களிலும், தலா, 370 பேரை பொதுக்கூட்டத்தில் பங்கேற்கச் செய்ய வேண்டும்.மாநிலத் தலைவர் அண்ணாமலை, தனது உடலை வருத்திக் கொண்டு, யாத்திரைக்காக அனைத்தையும் செய்து வருகிறார். அவரது உழைப்பு ஈடு இணையற்றது. இத்தனை நாட்கள் அவர் உழைத்ததற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, பொதுக்கூட்டத்தை முழு வெற்றி பெறச் செய்ய உழைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.