| ADDED : நவ 22, 2025 06:38 AM
திருப்பூர்: திருப்பூரில் வியாபாரி ஒருவரின் வங்கி கணக்கிலிருந்து 85 ஆயிரம் ரூபாய் மாயமானது குறித்து சைபர் கிரைம் பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர். திருப்பூர், தோட்டத்துப் பாளையம், மகா விஷ்ணு நகரைச் சேர்ந்தவர் பூபதி, 46. அப்பகுதியில் கட்டுமான பொருள் விற்பனை செய்து வருகிறார். அவர் பெயரில் சேமிப்பு வங்கி கணக்கு, பி.என். ரோடு பாங்க் ஆப் பரோடா கிளையில் உள்ளது. அண்மையில் அவர் வங்கி கணக்கிலிருந்து 85 ஆயிரம் ரூபாய் யு.பி.ஐ., பரிவர்த்தனையில் சென்றுள்ளது. அது ஒரு தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பெயரில் இருந்தது. அந்நிறுவனத்தில் எந்த நடவடிக்கையும் அவர் மேற்கொள்ளவில்லை என்ற நிலையில் தொடர்பு கொண்டு கேட்ட போது, அவர்கள் பாலிசி எண் விவரம் கேட்டுள்ளனர். தான் எந்த பாலிசியும் எடுக்கவில்லை என்பதால் அவர் கோவையில் உள்ள அலுவலகத்துக்கு விசாரிக்கச் சென்றார். கோவை அலுவலகம் மூடப்பட்ட விவரம் தெரிந்தது. அதிர்ச்சியடைந்த அவர் வங்கி கிளையை அணுகி விசாரித்த போது, எந்த வங்கி கணக்குக்கு பணம் மாறியது என கண்டறிய முடியவில்லை. இதனால், பூபதி திருப்பூர் மாநகர 'சைபர் கிரைம்' போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.