கோமாரி தடுப்பூசி; 16 முதல் முகாம்கள்
திருப்பூர்; திருப்பூர் மாவட்டத்திலுள்ள கால்நடை நிலையங்களில், வரும் 16ம் தேதி முதல், கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்பட உள்ளது.வைரஸ் நச்சுயிரியால் ஏற்படும் கோமாரி நோய், ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை கடுமையாக பாதிக்கச் செய்கிறது. பால் உற்பத்தி குறைவு, சினைபிடிப்பு தடைபடுதல், எருதுகளின் வேலை திறன் குறைவு, இளங்கன்றுகள் இறப்பு ஏற்படும். இதனால், கால்நடை வளர்ப்பாளர்கள், பொருளாதார இழப்பை சந்திக்கநேரிடும். கறவை மாடுகளுக்கு கோமாரி நோய் தாக்காமல் தடுக்க, கால்நடை பராமரிப்பு துறை சார்பில் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை என, ஆண்டுக்கு இரண்டு முறை இலவசமாக கோமாரி தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.திருப்பூர் மாவட்டத்தில், நடப்பாண்டு வரும் 16 முதல் ஜனவரி 20ம் தேதி வரை, கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. 13 ஒன்றியங்களில் உள்ள கிராமங்கள், நகர் புறங்களில் உள்ள அனைத்து கால்நடைகளுக்கும், கால்நடை நிலையங்கள் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.கால்நடை வளர்ப்பாளர்கள், கால்நடை நிலையங்களுக்கு தங்கள் கால்நடைகளை அழைத்துச்சென்று, இலவச தடுப்பூசி செலுத்தவேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.