பாதியில் நிற்கும் பணி
உடுமலை, பார்க் ரோடு நகராட்சி பூங்கா சீரமைக்கும் பணி பாதியிலே நிற்கிறது. மழைநீர் வடிகால் அமைப்பதற்காக தோண்டப்பட்ட மண்ணை வாகனத்தில் கொண்டு வந்து இங்கு கொட்டிச்சென்றுள்ளனர். எனவே, பூங்கா சீரமைக்கும் பணியை நகராட்சியினர் விரைந்து முடிக்க வேண்டும்.- கருப்பசாமி, உடுமலை. துார் வார வேண்டும்
உடுமலை, ராஜலட்சுமி நகர் செல்லும் வழியில், உள்ள கழிவுநீர் கால்வாய் துார்வாரப்படாமல், செடிகள், குப்பை, கழிவுகள் அடைத்துக்கொள்கிறது. இதனால், துர்நாற்றம் வீசுகிறது. சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. எனவே, நகராட்சியினர் இந்த கால்வாயை துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.- கென்னடி, உடுமலை. கழிவுநீர் தேக்கம்
உடுமலை - பழநி ரோட்டில், கழுத்தறுத்தான் பள்ளத்தில், மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தேங்கியுள்ளது. இதனால், கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகிறது. இப்பணிகளை அரசுத்துறையினர் விரைந்து முடிக்க வேண்டும்.- முருகன், உடுமலை. ரோட்டில் கற்கள்
உடுமலை ராஜேந்திரா ரோட்டில் இருக்கும் மண் குவியலில், கற்கள் சரிந்து ரோட்டில் கிடக்கின்றன. இரவு நேரங்களில் அப்பகுதியில் போதிய வெளிச்சமும் இல்லாததால், வாகன ஓட்டுநர்கள் அடிக்கடி சிதறிக்கிடக்கும் கற்களால் விபத்துக்குள்ளாகின்றனர். நகராட்சியினர் இதை சரிசெய்ய வேண்டும்.- கலைவாணி, உடுமலை. ரோட்டை சீரமைக்கணும்
உடுமலை, நேரு வீதியில் புதிதாக போடப்பட்டுள்ள ரோட்டில், பாதாளச்சாக்கடை குழிகளின் மீது அடையாளம் போடப்படாமல் மேடு பள்ளமாக உள்ளது. இதனால் அவ்வழியாக செல்வோருக்கு, அடையாளம் தெரியாமல் தடுமாறி கிழே விழுகின்றனர். முதியவர்கள் அவ்வழியாக செல்வதற்கும் பாதுகாப்பில்லாத சூழலாக உள்ளது. விரைவில் ரோட்டை சீரமைக்க வேண்டும்.- சத்யப்ரியா, உடுமலை. வாகனங்கள் ஆக்கிரமிப்பு
உடுமலை, பஸ் ஸ்டாண்ட் பின்புறம் கனரக வாகனங்கள் ரோட்டை ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன. பஸ்கள் வந்து திரும்பும் நேரங்களில் மற்ற வாகனங்கள் செல்வதற்கு வழியில்லாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இது குறித்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ராம்குமார், உடுமலை. தெருநாய்கள் தொல்லை
உடுமலை, பசுபதி வீதியில் தெருநாய்களின் தொல்லை இரவு நேரங்களில் அதிகமாகவே உள்ளது. இரவு நேரங்களில் ரோட்டில் கூடி பொதுமக்களை அச்சுறுத்துவதும், சண்டையிட்டுக்கொள்வதுமாக உள்ளது. இதனால் இரவில் நிம்மதியாக உறங்கவும் முடியாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.- விஜயராகவன், உடுமலை. வேகத்தடை தேவை
பொள்ளாச்சி - பாலக்காடு ரோட்டில் உள்ள மேம்பாலத்தின் கீழ், சர்வீஸ் ரோட்டில் வேகத்தடை இல்லாததால் ரோட்டில் செல்லும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது. எனவே, நெடுஞ்சாலைத்துறை சார்பில் சர்வீஸ் ரோட்டில் வேகத்தடை அமைக்க வேண்டும்.-- விக்ரம், பொள்ளாச்சி. ரோட்டில் இறைச்சிக்கழிவு
பொள்ளாச்சி, பக்கோதிபாளையத்திலிருந்து ஆவல்சின்னாம்பாளையம் செல்லும் வழியில், ரோட்டோரத்தில் இறைச்சிக்கழிவு கொட்டப்பட்டுள்ளது. இதை நாய், பறவைகள் ரோட்டுக்கு இழுத்துச் சென்று குதறுவதால் துர்நாற்றம் வீசுகிறது. வாகன ஓட்டுநர்கள் சிரமப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.-- -ஆனந்த், மாக்கினாம்பட்டி. விதிமீறும் வாகனங்கள்
பொள்ளாச்சி நகர் பகுதியில், முக்கிய ரோட்டில் சரக்கு வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதில், பல வாகனங்கள் அதிக லோடு ஏற்றி செல்வதால் விபத்து ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே, போக்குவரத்து போலீசார் இதை கவனித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.- -ரஞ்சித், பொள்ளாச்சி. ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?
பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்ட் மற்றும் போக்குவரத்து நிறைந்த இடத்தில், ரோட்டோரம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கடைகள் வைக்கப்பட்டுள்ளது. இதனால், பாதசாரிகள் நடந்து செல்வதும், பைக் ஓட்டுநர்கள் ரோட்டில் செல்லவும் சிரமம் ஏற்படுகிறது. எனவே, ஆக்கிரமிப்புகளை நகராட்சி நிர்வாகம் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். -- -கண்ணன், பொள்ளாச்சி. சாக்கடை குழியால் சிக்கல்
பொள்ளாச்சி, பாலகோபாலபுரம் வீதியில், பாதாள சாக்கடை ஆள் இறங்கும் குழி சேதம் அடைந்து உள்ளது. இதனால் அடைப்பு ஏற்பட்டால், சாக்கடை கழிவு நீர் குழியில் இறங்குவதில் சிரமம் ஏற்படும். எனவே, சேதமடைந்த குழியை சரிசெய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-- -பெருமாள், பொள்ளாச்சி. தடுப்பு ஓரத்தில் குப்பை
கிணத்துக்கடவு, மார்க்கெட் அருகே உள்ள சர்வீஸ் ரோட்டில் தடுப்புகள் இருக்கும் இடத்தில், அதிகளவு குப்பை கொட்டப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. பேரூராட்சி நிர்வாகமோ அல்லது தேசிய நெடுஞ்சாலைத்துறை நிர்வாகமோ குப்பையை அகற்ற வேண்டும்.--- -ஆனந்த், கிணத்துக்கடவு.