குறுகலான கால்வாய் பாலங்கள்; விரிவாக்கம் அவசியம்
உடுமலை; பிரதான ரோடுகளில், கால்வாய் பாலங்கள், விரிவுபடுத்தாமல் இருப்பதால், போக்குவரத்தில் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது.பி.ஏ.பி., உடுமலை கால்வாய் வாயிலாக, நான்கு மண்டலங்களில், 30 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.இந்த கால்வாய் திருமூர்த்தி அணையில் துவங்கி, 25 கி.மீ.,க்கும் அதிகமான துாரம் அமைந்துள்ளது. இந்த கால்வாயின் குறுக்கே, பல ரோடுகளுக்கான பாலங்கள் கட்டப்பட்டுள்ளன.கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை, கொழுமம் ரோடு, சின்னாறு ரோடு, திருமூர்த்திமலை ரோடு, கல்லாபுரம் ரோடு உள்ளிட்ட பிரதான ரோடுகளின் குறுக்கே கால்வாய் செல்கிறது.இதில், நீண்ட இழுபறிக்குப்பிறகு, தேசிய நெடுஞ்சாலையில் இருந்த பாலம் மட்டும் விரிவுபடுத்தப்பட்டது. பிற பாலங்கள் மேம்பாடு கிடப்பில் போடப்பட்டுள்ளது.மேலும், கிராம இணைப்பு ரோடுகளில் அமைந்துள்ள பாலங்கள் மிகவும் குறுகலாக, கனரக வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு உள்ளது.குறிப்பாக, உடுமலை நகரில் இருந்து, ஜீவா நகர் வழியாக கண்ணமநாயக்கனுார் செல்லும் ரோட்டில், கால்வாய் பாலம் மிகவும் குறுகலாக உள்ளது.இந்த வழித்தடத்தில் நாள்தோறும் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. விவசாயம் பிரதானமாக உள்ள இப்பகுதியில் இருந்து டிராக்டர் மற்றும் இதர சரக்கு வாகனங்களில், விளைபொருட்களை நகருக்கு எடுத்து வர முடிவதில்லை.பல கி.மீ., துாரம் சுற்றி வர வேண்டியுள்ளது. எனவே, அதிகரித்துள்ள வாகன போக்குவரத்தை கணக்கிட்டு, உடுமலை கால்வாய் மீது அமைந்துள்ள பாலங்களை மேம்படுத்தி விரிவுபடுத்த பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் ஒன்றிய நிர்வாகம் வாயிலாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதனால், பாலங்கள் வலுவிழந்து, போக்குவரத்து துண்டிக்கப்படும் அபாயம் தவிர்க்கப்படும் என, மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.