குறுகலாக மாறிய ஒட்டுக்குளம் கரை; மண் அரிப்பால் மக்கள் கவலை
உடுமலை; ஒட்டுக்குளம் கரை வலுவிழந்து, புதர் மண்டியுள்ளதால், விவசாயிகளும், அவ்வழித்தடத்தை பயன்படுத்தும் கிராம மக்களும் அச்சத்துடன் செல்ல வேண்டியுள்ளது.உடுமலை ஏழு குள பாசன திட்டத்தின் கீழ், ஒட்டுக்குளம் பொதுப்பணித்துறையால் பராமரிக்கப்படுகிறது. நகரின் அருகில், 90 ஏக்கர் பரப்பில், அமைந்துள்ள குளம், சுற்றுப்பகுதி விளைநிலங்களின் முக்கிய நீராதாரமாக உள்ளது.முக்கியத்துவம் வாய்ந்த இந்த குளத்தின் கரையின், ஒரு புறத்தில், மண் அரிப்பு ஏற்பட்டு, வலுவிழந்து வருகிறது. மழைக்காலத்தில், இந்த அரிப்பு அதிகரித்து, கரையில், ஆங்காங்கே சிறிய கால்வாய் போல ஏற்பட்டுள்ளது.எனவே, கரையை பொதுப்பணித்துறையினர் வலுப்படுத்த வேண்டும் என, நீண்ட காலமாக அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.கரையை ஒட்டி அமைந்துள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, மண் அணைத்து, கரையை வலுப்படுத்தினால், குளத்தின் முழு கொள்ளளவில், நீர் தேக்க முடியும்; மழைக்காலத்திலும் உடைப்பு ஏற்படும் அச்சம் இருக்காது.உபரி நீர் வெளியேறும் மதகு பகுதியிலும், பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என, விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.உடுமலை ஒன்றிய அலுவலகம் அருகில் இருந்து பிரிந்து, ஒட்டுக்குளம் கரை வழியாக அமைந்துள்ள பாதையை, சுண்டக்கம்பாளையம் மற்றும் சுற்றுப்பகுதி விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர்.மேலும், கரும்பு உள்ளிட்ட விளைபொருட்களையும் குளத்தின் கரை வழியாகவே கொண்டு செல்கின்றனர். இந்நிலையில், கரையின் இருபுறங்களிலும், புதர் மண்டி, பாதை குறுகலாக மாறியுள்ளது.இதனால், இருசக்கர வாகனங்கள் செல்லவே சிரமப்படும் நிலை உள்ளது. புதர்களை அகற்றி, மண் பாதையிலுள்ள குழிகளை சீரமைக்கவும், அப்பகுதி மக்கள் ஒன்றிய நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.