உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / எங்க ஏரியா... உள்ளே வராதீங்க: பூண்டியில் மாநகராட்சி குப்பைகளை கொட்ட தடை

எங்க ஏரியா... உள்ளே வராதீங்க: பூண்டியில் மாநகராட்சி குப்பைகளை கொட்ட தடை

திருப்பூர்; திருமுருகன்பூண்டி நகராட்சி எல்லையில், திருப்பூர் மாநகராட்சி குப்பைகளை கொட்ட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 'இவ்விவகாரத்தில் அனைத்துக்கட்சி கவுன்சிலர்களும் ஒருமித்த கருத்துடன் செயல்படுகின்றனர்' என, நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. திருப்பூரில் தினமும் சேகரமாகும் குப்பைகளை கொட்டுவதற்கும், அதை தரம் பிரிப்பதற்கும் மாநகரில் இடம் இல்லை. ஆங்காங்கே உள்ள பாறைக்குழிகளை தேடிச் சென்று குப்பை கொட்ட முயற்சித்தாலும், அப்பகுதியில் உள்ள மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால், மாநகராட்சி நிர்வாகத்தினர் தவிக்கின்றனர். மாற்றுத்திட்டத்தை ஆலோசித்து வருகின்றனர். மாநகராட்சி எல்லையை ஒட்டிய, திருமுருகன்பூண்டி நகராட்சிக்குட்பட்ட, அம்மாபாளையம் கணபதி நகர் விரிவு பகுதியில் உள்ள பாறைக்குழியில், சில ஆண்டுகள் முன், மாநகராட்சி நிர்வாகம் குப்பை கொட்டியது. இதற்கு கம்யூ., கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆர்ப்பாட்டம், முற்றுகை என, சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும் அளவுக்கு விவகாரம் பெரிதானது. அதன் விளைவாக, குப்பை கொட்டும் முயற்சியை மாநகராட்சி நிர்வாகம் கைவிட்டது. கடந்த மாதம், மீண்டும் குப்பை கொட்ட மாநகராட்சி நிர்வாகம் முயற்சி மேற்கொள்வதாக, மா.கம்யூ., - இந்திய கம்யூ., உட்பட பிற கட்சியினர் ஒருமித்த கருத்துடன் தங்கள் எதிர்ப்பை வெளிக்காட்டினர். இதனால், நகராட்சி தலைவர் மற்றும் அதிகாரிகள், குப்பை கொட்ட அனுமதி மறுத்துள்ளனர். திருமுருகன்பூண்டி நகராட்சி தலைவர் குமார் கூறுகையில்,''கணபதி நகர் விரிவு பகுதியில் உள்ள பாறைக்குழியில், திருப்பூர் மாநகராட்சி சார்பில் குப்பைக் கொட்ட கவுன்சிலர் உள்ளிட்ட மக்கள், கடும் எதிர்ப்பும் ஆட்சேபனையும் தெரிவித்தனர். இதனால், கடும் துர்நாற்றம் வீசி, சுகாதாரக்கேடு ஏற்படும் சூழலும் இருந்தது. பூண்டி எல்லைக்குள் குப்பை கொட்ட வேண்டாம் என, மாநகராட்சி நிர்வாகத்திடம் கேட்டுக் கொண்டோம். கடந்த காலங்களில் இப்பிரச்னையால் ஏற்பட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்தும் விளக்கினோம். இதனால், குப்பை கொட்டுவதை, கடந்த மாதம், 17ம் தேதியில் இருந்தே மாநகராட்சி நிர்வாகம் நிறுத்திக் கொண்டது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை