பேரிலக்கு நோக்கி வீறுகொள்ளும் நம் தேசம்
பி ரதமர் மோடி, தனது சுதந்திர தின உரையில், ''விக்சித் பாரத் ரோஜ்கர் திட்டத்தின் கீழ், ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்'' என்று தெரிவித்துள்ளார். வரும் 2047ல் நம் நாடு சுதந்திரம் பெற்று நுாற்றாண்டை எட்டியிருக்கும். இதை வரவேற்க 'விக்சித் பாரத்' என்ற பெயரில் இப்போதே மத்திய அரசு தயாராகி வருகிறது. அதோடு அடுத்த, 25 ஆண்டு நகர்வுக்கான கால கட்டத்தை 'அமிர்த காலம்' எனவும் அழைக்கச் சொல்லியிருக்கிறது. அரசியல்வாதிகள், தொழில் முனைவோர், விவசாயிகள், மாணவர்கள், பட்டதாரிகள், தொழிலாளர்கள் உட்பட அனைத்து குடிமக்களையும் ஒன்றிணைக்கும் திட்டமாக இது வடிவமைக்கப்பட உள்ளது. 'விக்சித் பாரத்' என்பது பொருளாதாரம், கல்வி, ஆரோக்கியம், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல், சமூக நீதி மற்றும் ஆளுமை ஆகிய அனைத்திலும் முன்னேறிய, சமநிலை கொண்ட, நவீன இந்தியாவை உருவாக்கும் ஒரு திட்டமாகும். இதுகுறித்து 'ஸ்டார்ட் - அப்' ஆலோசகர் ஜெய்பிரகாஷ், நம்மிடம் பகிர்ந்தவை: இதை திட்டமாக மட்டுமில்லாமல், மக்கள் இயக்கமாக மாற்றி, நம் நாட்டின் வளர்ச்சிக்கு ஒவ்வொருவரின் பங்களிப்பையும் உறுதி செய்கிறது, மத்திய அரசு. கடந்த, 75 ஆண்டில் நம் நாடு அடைந்த முன்னேற்றங்களை அடிப்படையாக கொண்டு, அடுத்த, 25 ஆண்டு கால வளர்ச்சியை திட்டமிட்டிருக்கிறது. இதன் இலக்கு, 30 டிரில்லியன் பொருளாதாரம், 100 சதவீதம் லட்சியத்தை எட்டுவது; நவீன சுகாதார வசதி; 100 சதவீதம் கல்வி. உலகளவில் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியை ஊக்குவித்தல்; குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி; 'ஸ்டார்ட்- அப்'களை, உலகளவில் எடுத்து செல்லுதல், சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் கூடிய நீடித்த வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியது. கிராமப்புற மாணவர்களும் தொழில் முனைவோராகலாம் டிஜிட்டல் இந்தியா, ஸ்கில் இந்தியா, மேக் இன் இந்தியா, ஸ்டாண்ட் அப் இந்தியா, முத்ரா உள்ளிட்ட பல வேலைவாய்ப்பு மற்றும் வளர்ச்சி திட்டங்கள் வாயிலாக, ஒரு சிறு கிராமத்து மாணவர் கூட, ஒரு தொழில் முனைவோராக மாற முடியும். மக்களின் வளர்ச்சி என்பது, கல்வி வளர்ச்சியை அடிப்படையாக கொண்டிருக்க வேண்டும். அந்த வகையில் வரும், 2047ல், ரோபோடிக், குவான்டம், பயோ டெக் மற்றும் கிரீன் டெக் உள்ளிட்ட புதிய துறைகளில், நிபுணராக இருக்க வேண்டும். இதற்கான ஊக்குவிப்பை மாநில அரசுகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் வழங்க வேண்டும். அத்துடன், பெண்களின் வளர்ச்சி சார்ந்த திட்டங்களையும் வகுக்க வேண்டும். விவசாயத்திலும், வியத்தகு முன்னேற்றங்கள் ஏற்பட போகின்றன. ஒவ்வொரு விவசாயியும் ஒரு தொழில் முனைவோராக மாற முடியும். ஒரு மாணவர், ஒரு புதிய தீர்வு குறித்து சிந்திப்பது; ஒரு விவசாயி, புதிய முறையில் பயிரிடுவது; ஒரு பெற்றோர், குழந்தையிடம் இந்திய மரபை கொண்டு சேர்ப்பது என அனைத்தும் 'விக்சித் பாரத்'-ன் ஒரு பங்கு தான். இவ்வாறு, அவர் கூறினார்.