பி.ஏ.பி., தண்ணீர் திருட்டு தடுப்பு; கூட்டுக்குழுவில் சங்க தலைவர்கள்
திருப்பூர்; பி.ஏ.பி., நீர் வினியோக குளறுபடிகளைக் களைதல், நீர் திருட்டு தடுத்தல் ஆகியவற்றுக்காக, சப்-கலெக்டர், ஆர்.டி.ஓ., உள்ளிட்ட அனைத்துத்துறை அதிகாரிகளை உள்ளடக்கிய கூட்டுக் கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.இக்குழுவின் தாராபுரம் கோட்ட தலைவரும், ஆர்.டி.ஓ.,வுமான பெலிக்ஸ் ராஜா வெளியிட்டுள்ள சுற்றறிக்கை:திருப்பூர், பி.ஏ.பி., பாசன கால்வாய் பகுதிகளில், முறைகேடாக வணிக நோக்கில் நடைபெறும் தண்ணீர் திருட்டை கண்டறிந்து, முறைகேடுகளில் ஈடுபடுவோர் மீது மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டும் இதுதொடர்பாக வழிகாட்டுதல் வழங்கியுள்ளது.அதன்படி, கால்வாய் பகுதிகளில் முறைகேடாக, வணிக நோக்கில் நடைபெறும் நீர் திருட்டை கண்டறிந்து, முறைகேடுகளில் ஈடுபடுவோர் மீது குற்ற வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முறைகேடாக நீர் எடுக்கும் ஆயக்கட்டுதாரர்களின் மின் இணைப்பு துண்டிக்கப்படும். மின் துண்டிப்பு கால கட்டங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படா வண்ணம், போலீஸ் பாதுகாப்புடன் மின் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.நீர் திருட்டில் ஈடுபடுவோரை கண்காணிக்க அமைக்கப்பட்டுள்ள அனைத்துத்துறை அலுவலர்கள் அடங்கிய கூட்டு கண்காணிப்பு குழுவில், திருப்பூர் கலெக்டர் பரிந்துரைப்படி, அந்தந்த பகிர்மானக்குழு எல்லைக்குட்பட்ட கிராம நீரை பயன்படுத்துவோர் சங்க தலைவர்களையும் இணைத்துக்கொள்ள வேண்டும்.