உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மனமகிழ் மன்றத்தால் மனவேதனை அகற்ற வலியுறுத்தி மாடுகளுடன் மக்கள் போராட்டம்

மனமகிழ் மன்றத்தால் மனவேதனை அகற்ற வலியுறுத்தி மாடுகளுடன் மக்கள் போராட்டம்

அவிநாசி:அவிநாசி அருகே மனமகிழ் மன்றத்தை நிரந்தரமாக அகற்றக்கோரி, 300க்கும் மேற்பட்ட மக்கள், மாடுகளுடன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.சேவூர் ஊராட்சி, பந்தம்பாளையத்தில் சில மாதங்களுக்கு முன் மனமகிழ் மன்றம் திறக்கப்பட்டது. இதையறிந்த வேட்டுவபாளையம், முறியாண்டம்பாளையம், சேவூர் பகுதி மக்கள், மனமகிழ் மன்றத்தை மூட வலியுறுத்தி, 2023 செப்., 19ல், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.'ஏழு நாளில் நடவடிக்கை எடுக்கப்படும்' என, தாசில்தார் மோகனன் தெரிவித்ததையடுத்து, மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்; இருப்பினும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இருப்பினும், மனமகிழ் மன்றம் மூடப்படாத நிலையில், அப்பகுதியில் நேற்று, மாடுகளை பிடித்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வலுப்பெற்ற போராட்டம்

அவிநாசி தாசில்தார் மோகனன், 'சைபர் கிரைம்' கூடுதல் துணை கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, டி.எஸ்.பி.,கள் பவுல்ராஜ் (அவிநாசி), விஜிகுமார் (பல்லடம்) உள்ளிட்டோர் மக்களிடம் பேச்சு நடத்தினர்.சேவூர் ஊராட்சி தலைவர் வேலுசாமி கூறுகையில், ''கட்டடம் கட்ட மட்டுமே ஊராட்சி சார்பில் அனுமதி கொடுக்கப்பட்டது. 'பார்' நடத்தவோ, மனமகிழ் மன்றம் நடத்தவோ, நாங்கள் அனுமதிக்கவில்லை,'' என்றார்.சமாதானமடையாத மக்கள், சாலை மறியலில் ஈடுபட போவதாக கூறி, மாடுகளுடன் சேவூர் ரவுண்டானா நோக்கி சென்றனர். மாடுகளை பிடித்து வர போலீசார் அனுமதி மறுத்ததால், தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால், ஊராட்சி தலைவர்கள் வேலுசாமி (சேவூர்), ரவிக்குமார் (முறியாண்டம்பாளையம்), கணேசன் (வேட்டுவபாளையம்), கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஈஸ்வரன், வெங்கடாசலம் ஆகியோர் கலெக்டரை சந்தித்து முறையிட சென்றனர்.

'பார்' அல்லது மனமகிழ் மன்றம் அமைக்க அதன் உரிமையாளர்கள் விண்ணப்பித்தவுடன், சம்மந்தப்பட்ட காவல் நிலையம், வருவாய்த்துறை, தீயணைப்பு நிலையம், மின்வாரியம் உள்ளிட்ட துறைகளில் இருந்து தடையில்லா சான்று பெற வேண்டும்.

'ஆட்சேபனை எதுவும் இருக்காது' என்பதை அவர் உறுதிப்படுத்திய பின்னரே அனுமதி வழங்க வேண்டும். ஆனால், மூன்று ஊராட்சி மக்கள் மற்றும் ஊராட்சி நிர்வாகங்களின் ஆட்பேசனை இருந்தும், எந்த அடிப்படையில் தடையில்லா சான்று வழங்கப்பட்டது என, மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.அதேநேரம், மூன்று ஊராட்சிகளிலும் கடந்தாண்டு, கிராம சபை கூட்டத்தில், மனமகிழ் மன்றம் திறக்க எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். எனவே, எதிர்ப்புகளை முன்கூட்டியே கணிக்காமல் தடையில்லா சான்று வழங்கிய துறை அதிகாரிகள், செய்வதறியாது விழிபிதுங்கியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி