| ADDED : நவ 22, 2025 05:56 AM
அவிநாசி: அவிநாசி ஒன்றியம், வேலாயுதம்பாளையம் ஊராட்சி, ராயன் கோவில் காலனி, 2வது வீதியில், ரோடு மிகவும் மோசம் அடைந்து நுழைவு பகுதியிலேயே சாக்கடை கால்வாய் கல்வெட்டுகள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சியளித்தது. இதனால், இரவு நேரங்களில் வேலைக்குச் சென்று திரும்புவோர், கல்லுாரி மற்றும் பள்ளி முடிந்து மாலை நேரம் வரும் மாணவர்கள் பலரும் குழியில் விழுந்து காயமுற்றனர். இதனை சீரமைக்க, பொதுமக்கள் ஊராட்சியில் பலமுறை முறையிட்டும் பலனில்லை. இதனால், பொதுமக்களே ஒன்று திரண்டு சிமென்ட், மண் வாங்கி, குழிகளில் கொட்டி ரோட்டை சீரமைத்தனர். அப்பகுதியினர் கூறியதாவது: கடந்த பத்து மாதமாக ரோட்டை சீரமைத்து தரக்கேட்டு, பலமுறை மனு அளித்தோம். இப்பகுதியில் வசிப்பவர்கள் மட்டுமின்றி, ராயன் கோவில் காலனி, 2வது வீதி சுற்றுப்பாதையை பயன்படுத்தி பைபாஸ் ரோட்டில் உள்ள சாய்பாபா கோவில் மற்றும் அய்யப்பன் கோவிலுக்கு செல்வோரும் பாதிப்புக்கு உள்ளாகினர். தற்போது கார்த்திகை மாதம் அய்யப்ப பக்தர்கள் அதிகளவில் கோவிலுக்கு வருவதால், நாங்களே ரோட்டை சீரமைத்தோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.