| ADDED : பிப் 09, 2024 11:39 PM
உடுமலை;உடுமலையின் பல்வேறு பகுதிகளுக்கு, கேரளாவில் விளைவிக்கப்படும் அன்னாசி பழங்கள், விற்பனைக்காக தருவிக்கப்படுகின்றன.கேரளா மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம் வாழக்குளம் பகுதியில், பல ஆயிரம் ஏக்கர் பரப்பில் அன்னாசி பழம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டு உற்பத்தி வழக்கத்தை விட அதிகரித்துள்ளது.இதனால், வெளிநாடுகள் மற்றும் பிற மாநிலங்களுக்கு, அதிகளவில் அன்னாசி பழம் விற்பனைக்காக எடுத்துச்செல்லப்படுகிறது.அவ்வகையில், தற்போது, உடுமலையின் பல்வேறு பகுதிகளுக்கு லாரிகளில் தருவிக்கப்படும் அன்னாசி பழங்கள், விற்பனைக்காக ஆங்காங்கே குவித்து வைக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஒரு பழம், 30 முதல் 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.வியாபாரிகள் கூறுகையில், 'வாழக்குளம் பகுதியில் விளைவிக்கப்படும் அன்னாசி பழம், சுவை மிகுந்து காணப்படும். தற்போது, அங்கு, அறுவடை துவங்கியுள்ளதால், உடுமலை, பொள்ளாச்சி சுற்றுப்பகுதிகளுக்கு அன்னாசி பழம் தருவிக்கப்பட்டு விற்கப்படுகிறது. மக்கள் பலரும், ஒன்றுக்கு மேற்பட்ட பழங்களை, ஆர்வமுடன் வாங்கிச்செல்கின்றனர்' என்றனர்.