திருப்பூர்;தமிழக அரசு, பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் 1000 ரூபாய் ரொக்கப்பரிசு வழங்கப்படுமென அறிவித்துள்ளது.திருப்பூர் மாவட்டத்தில், இன்று முதல், ரேஷன் கடை வாயிலாக, 'டோக்கன்' வினியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக, 'டோக்கன்' பிரின்ட் செய்யும் பணியும் நிறைவடைந்துள்ளது. இன்று முதல் 9ம் தேதி வரை, சுழற்சி முறையில், பொங்கல் பரிசு பெறும் வகையில், நாள், தேதி, நேரம் விவரத்துடன் டோக்கன் வினியோகம் செய்யப்பட உள்ளது.வரும், 10ம் தேதி முதல், தினமும், 200 கார்டுதாரர் வீதம், பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கப்பரிசு வினியோகமும் நடக்க உள்ளது. இம்முறை, அரிசி கார்டுதாரராக இருந்தாலும், வருமானவரி செலுத்துவோர், மத்திய, மாநில அரசு ஊழியர், பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு, பொங்கல் பரிசு கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியற்ற கார்டுகள்
அதன்படி, ஒவ்வொரு ரேஷன் கடை வாரியாக, பொங்கல் பரிசு பெற தகுதியற்ற கார்டுதாரர் விவரம் வழங்கப்பட உள்ளது. அந்தவகையில், 'டோக்கன்' கிடைக்காத கார்டுதாரர்களுக்கு, பொங்கல் பரிசு கிடையாது. இம்முறை, கை விரல் ரேகை பதிவு அடிப்படையில், பரிசு பொருட்கள் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.கூட்டுறவுத்துறை அலுவலர்கள் கூறியதாவது:கூட்டுறவு சங்கங்கள் மூலமாக பேசி, கரும்பு கொள்முதல் செய்யும் பணி துவங்கியுள்ளது; 9ம் தேதி முதல் கரும்பு வரத்துவங்கும்; அரிசி, சர்க்கரை தயார்நிலையில் உள்ளது.ரொக்கப்பரிசு பெறுவதில் புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால், கூட்டுறவுத்துறை மூலமாக, ஒவ்வொரு ரேஷன் கடைக்கும், பரிசு பெற தகுதியற்ற கார்டுகள் விவரம் அளிக்கப்படும். அத்தகைய கார்டுதாரர்களுக்கு, பொங்கல் பரிசு கிடைக்காது.'டோக்கன்' தயாராக இருப்பதால், நாளை (இன்று) முதல் மூன்று நாட்களுக்கு டோக்கன் வழங்கப்படும்; 10 ம் தேதி முதல், 13ம் தேதி வரை, பொங்கல் பரிசு வினியோகம் நடக்கும். தடையின்றி பரிசு தொகுப்பு வழங்க ஏதுவாக, தேவையான அளவு தற்காலிக பணியாளர் நியமிக்கப்பட்டுள்ளனர்; 12 ம் தேதி கடைகள் வழக்கம் போல் செயல்படும்; மற்றொரு நாளில் விடுப்பு அளிக்கப்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.