விசைத்தறி உரிமையாளர்கள் இன்று முதல் ஸ்டிரைக்
சோமனுார்:கூலி உயர்வு, ஆறு சதவீதம் மின் கட்டண உயர்வை ரத்து செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, விசைத்தறியாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், கருப்பு கொடி போராட்டங்களை நடத்தியும் பயனில்லை.இந்நிலையில் கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம், செயலர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் நேற்று சோமனுாரில் நடந்தது. இதுகுறித்து, சோமனுார் விசைத்தறியாளர் சங்க தலைவர் பூபதி கூறியதாவது:மாவட்ட நிர்வாகம் ஜவுளி உற்பத்தியாளர்களை அழைத்து பேச்சு நடத்தி, கூலி உயர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இரு நாட்களுக்கு முன் கலெக்டரை சந்தித்து முறையிட்டோம். சாதகமான பதில் கிடைக்கவில்லை. கூலி உயர்வு கிடைக்காமலும், மின் கட்டண உயர்வை சாமாளிக்க முடியாமலும் நெருக்கடியில் உள்ளோம். இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.