திருப்பூர்;பூலுவப்பட்டியில், ஆக்கிரமிப்பில் உள்ள அரசு நிலத்தை மீட்டு, பள்ளி பயன்பாட்டுக்கு வழங்கக்கோரி, பள்ளி மேலாண்மைக்குழு சார்பில், கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.மாவட்ட அளவிலான பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம், திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமைவகித்தார்.சிவன்மலை பொதுமக்கள்:காங்கயம், சிவன்மலையில், 550 குடும்பங்கள், கடந்த நுாறு ஆண்டுகளாக வசித்துவருகிறோம். எங்கள் வீட்டுமனையிடத்தை, கோவில் நிலம் என்று கூறி, பத்திரப்பதிவை முடக்கிவைத்துள்ளனர். இதுகுறித்து டி.ஆர்.ஓ., நடத்திய விசாரணையில், வருவாய்த்துறை ஆவணங்களில் நத்தம் என பதிவாகியுள்ளதாகவும்; கோவில் தரப்பு ஆவணங்களை சமர்ப்பிப்பதாகவும் கூறினர்.வி.ஏ.ஓ., வாக்குமூலத்தில், நத்தம் நிலமாக இருந்து, வீட்டுமனை பட்டா வழங்கியதாகவும், பட்டாமாறுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலத்தில்தான், பட்டாதாரர்கள் வசித்துவருகிறோம். கோவில் நிலம் என்பதற்கு இதுவரை எவ்வித ஆவணமும் சமர்ப்பிக்கப்படவில்லை. அரசு பட்டா வழங்கிய நிலத்தின் மீதான தடையை நீக்கவேண்டும்.பூலுவப்பட்டி மாநகராட்சி தொடக்கப்பள்ளி மேலாண்மை குழுவினர்:திருப்பூர், பூலுவப்பட்டி மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் ஒன்று முதல் ஐந்து வகுப்புகளில், மாணவ, மாணவியர் 800 பேர் படிக்கின்றனர். இப்பள்ளிக்கு போதிய வகுப்பறை; சத்துணவு கூட்ட வசதி இல்லை. அருகிலேயே 17 சென்ட் அரசு நிலம் உள்ளது. தனியார் ஆக்கிரமிப்பில் உள்ள இந்த நிலத்தை மீட்டு, பள்ளி பயன்பாட்டுக்கு வழங்கவேண்டும். புதிய வகுப்பறைகள், சமயல் கூட்டம் கட்டி, மாணவர்களின் இன்னல் களையவேண்டும்.மக்கள் வருகை அதிகரிப்புகடந்த டிச., 25ம் தேதி, கிறிஸ்துமஸ், 1ம் தேதி, ஆங்கில புத்தாண்டு விடுமுறை காரணமாக, தொடர்ந்து இரண்டு வாரமாக பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெறவில்லை. வரும் 15 ம் தேதி பொங்கல் பண்டிகை விடுமுறை.இதனால், நேற்று நடந்த குறைகேட்பு கூட்டத்துக்கு பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் வந்திருந்தனர். மனு அளிக்க வந்தோர், உடன் வந்தோர் என, கலெக்டர் அலுவலக வளாகம், குறைகேட்பு கூட்ட அரங்க பகுதிகளில், மக்கள் கூட்டம் கூட்டமாக நின்றிருந்ததால், பரபரப்பாக காணப்பட்டது. நேற்றைய முகாமில், பொதுமக்களிடமிருந்து மொத்தம், 462 மனுக்கள் பெறப்பட்டன.---பட விளக்கம்சிவன்மலை பகுதியில், நத்தம் நிலத்தை கோவில் நிலமாக மாற்றி பதிவு செய்ததை மாற்ற வேண்டுகோள் விடுத்தும், பூலுவபட்டி மாநகராட்சி பள்ளிக்கு இட வசதி கேட்டும், கலெக்டரிடம் மனு கொடுக்க திரண்ட பொதுமக்கள்.
மூதாட்டி தீக்குளிக்க முயற்சி
திருப்பூர், பாப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த சந்திரா, 65. குறைகேட்பு கூட்டத்தில் மனு அளிக்கவந்த சந்திரா, பாட்டிலில் கொண்டுவந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி, தீக்குளித்து தற்கொலை செய்ய முயன்றார். அவரை தடுத்து நிறுத்திய போலீசார், விசாரணை நடத்தினர். கணவர் முத்துசாமி இறந்துவிட்டநிலையில், அவர் பெயரில் உள்ள வீட்டை, மகனும் மருமகளும் அபகரித்துக்கொண்டு, துன்புறுத்துகின்றனர்; இதுகுறித்து போலீசில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லாததால் தீக்குளிக்க முயன்றதாக தெரிவித்தார்.---பட விளக்கம்தீக்குளிக்க முயன்ற மூதாட்டி சந்திரா.