திருப்பூர்:கோடை வறட்சி துவங்கியுள்ள நிலையில், வனத்தில் உள்ள மான் உள்ளிட்ட விலங்கினங்கள், வனத்தை விட்டு வெளியேறாத வகையிலான நடவடிக்கையில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்டு, 1,479 சதுர கி.மீ., பரப்பில், அமராவதி, பொள்ளாச்சி, வால்பாறை உள்ளிட்ட, 8 வனச்சரகங்கள் உள்ளன. இதில், திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை, உடுமலை பகுதியில், காப்புக்காடுகள் கணிசமான அளவு உள்ள நிலையில், அங்கு வனம் மற்றும் வனம் சார்ந்த செயல்கள் அதிகளவில் நடக்கிறது.தண்ணீர் மற்றும் உணவு தேடி, வன விலங்குகள் வனத்தை விட்டு, குடியிருப்பு பகுதிக்கு வருவது, வனத்தீ பரவல் உள்ளிட்டவை நடக்கின்றன. அவற்றை தவிர்ப்பதற்கு, வனப்பகுதியில் உள்ள தடுப்பணையில் தண்ணீர் நிரப்பி வைப்பது, தீத்தடுப்பு கோடுகள் வரைவது என, வனத்துறையினர் செயல்பட்டு வருகின்றனர்.''திருப்பூர் நகரப்பகுதியை பொறுத்தவரை, கோதபாளையம் பகுதியில் அதிகளவிலான மான்கள் உள்ளன. கோடையின் போது அவை உணவு, நீர் தேடி வெளியில் வருவதை தவிர்க்க, அங்குள்ள நீர்தேக்க தொட்டியில், நீர் நிரப்பும் பணி அவ்வப்போது மேற்கொள்ளப்படுகிறது; வனத்தீ பரவுவதற்கான வாய்ப்பு இங்கில்லை; இருப்பினும், காய்ந்த புல்வெளியில் தீயிடுவது உள்ளிட்ட செயல்களை தவிர்க்க வேண்டும் என, விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது'' என, திருப்பூர் ரேஞ்சர் சுரேஷ் கிருஷ்ணன் தெரிவித்தார். வெளியேறிய சிறுத்தை
ஊதியர் காப்புக்காடு அமைந்துள்ள காங்கயம் வனச்சரக ரேஞ்சர் தனபால் கூறுகையில், ''ஊதியூர் காப்புக்காட்டில், மான்கள் தான் அதிகளவில் உள்ளன. அருகேயுள்ள விவசாய நிலங்களுக்கு, அவை அவ்வப்போது வந்து செல்வது வழக்கம். கோடை வறட்சியை சமாளிக்க வனப்பகுதிக்குள் 'போர்வெல்' அமைத்து, அங்குள்ள தற்போது நீர்நிரப்பும் பணி அடுத்த வாரம் துவங்கும்; அங்கு பல மாதங்களாக முகாமிட்டிருந்த சிறுத்தை, தற்போது அங்கில்லை; வெளியேறிவிட்டது'' என்றார்.