உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  போலி டாக்டர் தம்பதி மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை

 போலி டாக்டர் தம்பதி மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை

திருப்பூர்: தாராபுரம் - குண்டடம் வழி, முத்தையன்பட்டியை சேர்ந்தவர், வெள்ளைச்சாமி, 50. மனைவி, வில்சி, 47. லைசன்ஸ் பெற்று, வீட்டின் முன் விநாயகா மெடிக்கல்ஸ் என்ற பெயரில் மருந்தகம் நடத்தி வந்துள்ளனர். பார்மஸி படிப்பு முடித்த ஒருவரை வேலைக்கு வைத்துள்ளனர். மருந்தகத்துக்கு வரும் பெரும்பாலானோர் காய்ச்சல், சளி, கை, கால் வலியுடன் வருவதால், பத்து ஆண்டுகளாக மருந்தகம் நடத்திய 'அனுபவத்தை' வைத்து, வெள்ளைச்சாமி. தனது வீட்டுக்குள்ளே மருத்துவமனை ஒன்றை ஆரம்பித்து, 'டாக்டராக' பணியாற்ற துவங்கினார்; மனைவி செவிலியராகவும், அவ்வப்போது 'டாக்டராகவும்' பணிபுரிந்து வந்தார். போலி டாக்டர், மருத்துவமனை செயல்பாடு குறித்து கலெக்டர் மனிஷ் நாரணவரேவுக்கு புகார் வர, மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் மீரா, கண்காணிப்பாளர் ஹரிகோபாலகிருஷ்ணன் தலைமையிலான மருத்துவக்குழுவினர், நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துக்கொண்டிருந்த வெள்ளைச்சாமியை கையும், களவுமாக பிடித்தனர். குண்டடம் போலீசார் அவரை கைது செய்த நிலையில், எத்தகைய மருந்துகள் பயன்படுத்தப்பட்டது, நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட மருந்துகள் எவை என்பது குறித்து மருந்தகம் மற்றும் மருத்துவமனையில், மருந்து கட்டுப்பாட்டு அலுவலர் உமாமகேஸ்வரி தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, மருந்தகத்தில் வில்சி இருந்தார். மருந்தகத்தில் இருந்து விற்பனை செய்யப்பட்ட மருந்துகளுக்கு பில் இல்லை. மருந்துகள் வாங்கப்பட்டதற்கு பதிவேடுகள் பராமரிக்கப்படவில்லை. ஒப்புகை சீட்டு இல்லாமல், நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரை வழங்கியது தெரிய வந்தது. மருந்துகள் மற்றும் அழகு சாதன பொருட்கள் சட்டம், 18 சி -ன் படி, ஆவணங்கள் முறையாக இல்லை உள்ளிட்ட பிரிவுகளில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. வெள்ளைச்சாமி, வில்சி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட மருத்துவத்துறைக்கு, மருந்துக்கட்டுப்பாட்டு துறை ஆய்வுக்குழுவினர் பரிந்துரைத்துள்ளனர். மருத்துவ பணிகள் துறை இணை இயக்குனர் மீரா கூறுகையில், 'மருந்தகம், மருத்துவமனையில் பயன்படுத்தப்பட்ட, பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை விரிவாக ஆய்வு செய்த பின், அடுத்த கட்ட விசாரணை மற்றும் நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை