உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  சட்ட விரோதமாக கால்வாயில் பதித்த குழாய் அகற்றம்

 சட்ட விரோதமாக கால்வாயில் பதித்த குழாய் அகற்றம்

உடுமலை: அமராவதி பழைய ஆயக்கட்டு, கடத்துார் ராஜவாய்க்காலில் சட்ட விரோதமாக பதிக்கப்பட்டிருந்த குழாய் அகற்றப்பட்டது. மடத்துக்குளம் தாலுகா, அமராவதி பழைய ஆயக்கட்டு கடத்துார் ராஜவாய்க்காலில் சட்டவிரோதமாக, குழாய்கள் அமைக்கப்பட்டு, பாசன நீர் திருடப்படுவதாக மாவட்ட கலெக்டரிடம் விவசாயிகள் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து, தாசில்தார் குணசேகரன், நீர் வளத்துறை உதவி பொறியாளர் ராமகிருஷ்ணன், எஸ்.ஐ., கார்த்திக்குமார் தலைமையிலான அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது, கால்வாயில் சட்ட விரோதமாக குழாய்கள் பதிக்கப்பட்டிருப்பதை, அதிகாரிகள் உறுதி செய்தனர். இதனையடுத்து, அகழ்வு இயந்திரம் வாயிலாக, நீருக்கு அடியில் சட்ட விரோதமாக பதிக்கப்பட்டு இருந்த குழாய்கள் உடைத்து அப்புறப்படுத்தப்பட்டது. இதே போல், அமராவதி ஆறு மற்றும் கால்வாய்களில் சட்ட விரோதமாக குழாய்கள் அமைத்து, பாசனம் அல்லாத நிலங்கள் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள, ஏராளமான தென்னை நார் தொழிற்சாலைகளுக்கு, பாசன நீர் திருடப்பட்டு வருகிறது. இதனால், அமராவதி விவசாயிகள் பாசனத்திற்கு நீர் கிடைக்காமல் பாதித்து வருகின்றனர். எனவே, அதிகாரிகளை கொண்ட தனி குழு அமைத்து, சட்ட விரோதமாக குழாய்கள் அமைத்து, பாசனம் அல்லாத நிலங்கள் மற்றும் தொழிற்சாலை பயன்பாட்டிற்கு கொண்டு செல்லும் நீர் திருட்டை தடுக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை