திருப்பூர்: திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், குடியரசு தின விழா நேற்று, கோலாகலமாக நடைபெற்றது.திருப்பூர் மாவட்ட வருவாய்த்துறை சார்பில், நாட்டின் 75வது குடியரசு தின விழா கொண்டாட்டம், சிக்கண்ணா கல்லுாரி மைதானத்தில் நேற்று நடைபெற்றது.காலை, 8:05 மணிக்கு துவங்கிய விழாவில், கலெக்டர் கிறிஸ்துராஜ், தேசியக்கொடி ஏற்றினார். பேண்டு வாத்தியக்குழுவினர் தேசிய கீதம் இசைக்க, கொடி வணக்கம் செலுத்தப்பட்டது.வாள் ஏந்திவந்த போலீஸ் படைப்பிரிவு கமாண்டர், படையினரை பார்வையிட, கலெக்ட ருக்கு அழைப்பு விடுத்தார். மலர் அலங்காரம் செய்யப்பட்ட திறந்த ஜீப்பில், கலெக்டர் மற்றும் எஸ்.பி.,சாமிநாதன் ஆகியோர், போலீஸ், என்.சி.சி., படையை பார்வையிட்டு, கொடிமேடை திரும்பினர்.கையில் துப்பாக்கி ஏந்தியபடி, போலீசார் மிடுக்கான அணிவகுப்பு நடத்தினர். கம்பெனி கமாண்டரான ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் மகேஸ்வரன், படைப்பிரிவினரை வழிநடத்தி சென்றார்.எஸ்.ஐ., ரஞ்சித்குமார் தலைமையில் முதல்படை; கவிப்பிரியா தலைமையில் இரண்டாம் படை; அருணகிரி தலைமையில் மூன்றாம் படைப்பிரிவினர் சென்றனர். ரஞ்சித் தலைமையில் ஊர்க்காவல் படையினரும், தொடர்ந்து என்.சி.சி., மாணவர்களும் அணிவகுப்பு நடத்தினர்.சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் புறா, மூவர்ண பலுான் பறக்கவிடப்பட்டது. சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களதுவாரிசுகள் கவுரவிக்கப்பட்டனர். பதக்கம் வழங்கல்
சிறப்பாக பணிபுரிந்த மாநகர போலீசார் 23 பேர்; மாவட்ட போலீசார் 39 பேர் என, 62 பேருக்கு முதலமைச்சர் பதக்கம்; போலீஸ் உட் பட அனைத்து துறைகளிலும் சிறப்பாக பணிபுரிந்த அரசு அலுவலர்கள் 298 பேருக்கு பாராட்டுச்சான்று வழங்கப்பட்டது. நலத்திட்ட உதவி
குடியரசு தின விழாவின் ஒருபகுதியாக, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, ஆதி திராவிடர் நலத்துறை, வேளாண் துறை, தாட்கோ உட்பட பல்வேறு துறைகள் சார்பில், 59 பயனாளிகளுக்கு, மொத்தம் 61 லட்சத்து 82 ஆயிரத்து 972 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில், வேளாண் பொறியியல் துறை சார்பில், வீரபாண்டியை சேர்ந்த விவசாயி நந்தகுமாருக்கு, 50 சதவீத மானியத்தில், டிராக்டர் வழங்கப்பட்டது.விழாவில், போலீஸ் கமிஷனர் பிரவின்குமார் அபிநபு, டி.ஆர்.ஓ., ஜெய்பீம், சப்-கலெக்டர் சவுமியா, துணை கமிஷனர்கள் வனிதா, அபிஷேக் குப்தா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி உட்பட அரசு அதிகாரி கள், அலுவலர்கள், பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.நடனத்தில் அசத்தல்குடியரசு தின விழாவின் இறுதியில், பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பல்லடம், கணபதிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், பொய்க்கால் குதிரை, மயில், காவடி ஆட்டத்துடன் நாட்டுப்புற பாடலுக்கு நடனமாடினர்.ஊத்துக்குளி கொங்கு மெட்ரிக் பள்ளி மாணவர்கள் பரதம், மூவர்ண ஆடை அணிந்து மேற்கத்திய நடனம் ஆடியும், மூவர்ண அட்டைகளை ஒருங்கிணைத்து மெகா தேசியக்கொடி உருவாக்கி அசத்தினர்.ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியர், தேச ஒருமைப்பாட்டு நடனம்; நெருப்பெரிச்சல் திருமுருகன் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் கரகம், மயிலாட்டம், திருப்பூர் பிரன்ட்லைன் மெட்ரிக், இடுவம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, பிஷப் உபகாரசாமி பள்ளி, 15 வேலம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் நடனமாடினர். கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கப்பட்டது.