உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தென்னை வளர்ச்சி வாரியத்தின் மையத்தில் ஆராய்ச்சிகள் தேவை! நாற்று விற்பனை மட்டும் நடப்பதால் கவலை

தென்னை வளர்ச்சி வாரியத்தின் மையத்தில் ஆராய்ச்சிகள் தேவை! நாற்று விற்பனை மட்டும் நடப்பதால் கவலை

உடுமலை: தென்னை வளர்ச்சி வாரியத்தின் திருமூர்த்திநகர் தென்னை மகத்துவ மையத்தை, முழுமையாக செயல்பாட்டுக்கு கொண்டு வந்து, நோய்த்தடுப்பு ஆராய்ச்சிகள் மற்றும் தொழில்நுட்ப வழிகாட்டுதல்கள் வழங்க வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில், 80 ஆயிரம் ெஹக்டேர் பரப்பளவில், தென்னை நீண்ட கால பயிராக பராமரிக்கப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தென்னை சாகுபடியில் தொடர் பிரச்னைகளை விவசாயிகள் சந்தித்து வருகின்றனர். பல்வேறு நோய்த்தாக்குதலால், பல்லாயிரக்கணக்கான தென்னை மரங்களை வெட்டி அகற்றியுள்ளனர். காய்ப்பு திறன் குறைந்துள்ளதால், தேங்காய், கொப்பரை விலை அதிகரித்தும் விவசாயிகளுக்கு பலன் கிடைக்கவில்லை. தென்னை மரங்களில், கடந்த சில ஆண்டுகளாக வெள்ளை ஈ தாக்குதல் குறையவே இல்லை. ஓலைகளின் பச்சையத்தை சுரண்டுதல் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும், இந்த வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்த முடியாமல், விவசாயிகள் திணறி வருகின்றனர். இதே போல், பல்வேறு வாடல் நோய்களால், மரங்கள் கருகி விடுகின்றன. இவ்வாறு, தென்னை சாகுபடி அழிவை சந்தித்தும் அரசு தரப்பில் போதிய உதவிகள் கிடைக்கவில்லை. உடனே துவங்கணும்! உடுமலை திருமூர்த்திநகரில், 102 ஏக்கர் பரப்பளவில், தென்னை வளர்ச்சி வாரியத்தின், ஆராய்ச்சி மற்றும் செயல்விளக்க பண்ணை, கடந்த, 2015ல் துவக்கப்பட்டது. மத்திய அரசின் தென்னை வளர்ச்சி வாரியத்தின் கீழ், இப்பகுதியில் துவக்கப்பட்ட ஆராய்ச்சி மையம் குறித்து தென்னை விவசாயிகளிடையே அதிக எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கேற்ப, அப்பண்ணை வளாகத்தில், தென்னை மகத்துவ மையமும் துவக்கப்பட்டது. ஆனால், தற்போது விவசாயிகளுக்கு தேவையான தென்னை நாற்றுகள் மட்டும் உற்பத்தி செய்து விற்பனை செய்யப்படுகிறது. நோய்த்தாக்குதல்கள் குறித்த ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைகள் எதுவும், வாரியத்தின் வாயிலாக வழங்கப்படுவதில்லை. இதனால், தனியாரிடம் பரிந்துரைகள் பெற்று, பல்வேறு மருந்துகளை பயன்படுத்தி விவசாயிகள் பாதித்து வருகின்றனர். தமிழகத்தில் மிகப்பெரிய பரப்பளவில், தென்னை வளர்ச்சி வாரியத்தின் ஆராய்ச்சி மையம் அமைந்தும், அங்கு எவ்வித ஆராய்ச்சி மற்றும் இதர பணிகள் துவங்காதது விவசாயிகளிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. விவசாயிகள் பயன்பெறுவர் தென்னை விவசாயிகள் கூறியதாவது: தென்னை வளர்ச்சி வாரியத்தின் தென்னை மகத்துவ மையத்தில், நோய்த்தாக்குதல் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்த ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அப்போதுதான் அழிவிலிருந்து தென்னை விவசாயத்தை மீட்க முடியும். ஆராய்ச்சி மற்றும் செயல்விளக்க பண்ணைக்கு செல்லும் விவசாயிகளுக்கு தொழில்நுட்ப ஆலோசனைகள் நேரடியாக கிடைக்கும். விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுநர்களை நியமிக்க வேண்டும். நோய்த்தடுப்பு மருந்துகள், உயிர் உரங்கள் என தென்னை சார்ந்த பொருட்கள் உற்பத்தியையும் அங்கு மேற்கொண்டால், லட்சக்கணக்கான விவசாயிகள் பயன்பெறுவார்கள். முதற்கட்டமாக, பல ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் உள்ள நோய்த்தாக்குதலுக்கு தீர்வு கிடைக்கும் வகையில், தேவையான ஆராய்ச்சிகளை துவக்க வேண்டும். அப்போதுதான், ஆராய்ச்சி நிலையம், மகத்துவ மையம் துவக்கியதற்கான உண்மையான நோக்கம் நிறைவேறும். தமிழகம் முழுவதும் உள்ள தென்னை விவசாயிகள் இத்தகைய ஆராய்ச்சிகளால் பயன்பெறுவார்கள். இவ்வாறு, தெரிவித்தனர். இந்த கோரிக்கை தென்னை விவசாயிகளை உள்ளடக்கிய, உற்பத்தியாளர் நிறுவனங்கள் சார்பில், தென்னை வளர்ச்சி வாரியத்துக்கு தொடர்ச்சியாக கோரிக்கை மனு அனுப்பி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி