உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பாதுகாப்பு சுவர் தான் என்கிறார்கள் குடியிருப்பாளர்கள்

பாதுகாப்பு சுவர் தான் என்கிறார்கள் குடியிருப்பாளர்கள்

திருப்பூர்:தனியாருக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டுள்ள பாதுகாப்பு சுவரை, தீண்டாமை சுவர் என்று கூறக்கூடாது என, சேவூர் வி.ஐ.பி., கார்டன் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில், கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.அவிநாசி அருகே சேவூர் ஊராட்சி, வி.ஐ.பி., கார்டன் மற்றும் தேவேந்திரன் நகர் குடியிருப்புக்கு நடுவே சுவர் கட்டப்பட்டுள்ளது. தீண்டாமை சுவரை அகற்ற வேண்டும் என தேவேந்திரன் நகர் பகுதி மக்கள், கலெக்டரிடம் ஏற்கனவே மனு அளித்திருந்தனர். இதனால், அந்த சுவரை அகற்ற கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.இந்நிலையில், சேவூர் - வி.ஐ.பி., கார்டன் குடியிருப்போர் நல சங்க தலைவர் நாகராஜன், செயலாளர் கோவிந்தசாமி மற்றும் நிர்வாகிகள், நேற்றைய குறைகேட்பு கூட்டத்தில் பங்கேற்று கலெக்டரிடம் மனு அளித்தனர்.செயலாளர் கோவிந்தசாமி கூறியதாவது:சேவூர் வி.ஐ.பி., கார்டனில், 73 மனையிடங்களில், வீடுகட்டி வசித்து வருகிறோம். இந்த இடத்தில் நாங்கள் மனைவாங்கும்போதே, மனையிடத்துக்கு கிழக்குப்பகுதியில், பாதுகாப்பு சுவர் அமைக்கப்பட்டிருந்தது.பட்டா பூமியில், தனது விவசாய நிலத்துக்கு பாதுகாப்பாக ஒருவர் சுவர் கட்டியுள்ளார். இது, வி.ஐ.பி., கார்டன் மனையிடங்களுக்கும் பாதுகாப்பாக உள்ளது. வி.ஐ.பி., கார்டனில், பல்வேறு சமுதாயத்தை சேர்ந்தோர் ஒற்றுமையுடன் வசித்துவருகிறோம். சிலர், பாதுகாப்புக்காக கட்டப்பட்ட சுவரை, தீண்டாமை சுவர் என சித்தரித்துவருகின்றனர். தனியாருக்கு சொந்தமான இடத்தில் 360 அடி நீளத்தில் கட்டப்பட்டுள்ள பாதுகாப்பு சுவரை, தீண்டாமை சுவர் என கூறுவது, உண்மைக்கு புறம்பானது.இதுதொடர்பாக, அவிநாசி சார்பு நீதிமன்றத்தில் பழனிசாமி வழக்கு தொடர்ந்துள்ளார். மனையிடத்தை கிரயம் கொடுத்த நான்கு பேரில் ஒருவரான நடராஜன், இந்த சுவர் தொடர்பாக கடந்தாண்டு கலெக்டரிடம் அளித்த மேல்முறையீடும், நிலுவையில் உள்ளது.நீதிமன்ற வழக்கில் தீர்ப்பு வரும்வரை, பாதுகாப்பு சுவரை, தீண்டாமை சுவர் என கூறக்கூடாது. மனையிடங்களுக்கு பாதுகாப்பாக உள்ள சுவரை அகற்றக்கூடாது.இவ்வாறு, அவர் கூறினார்.கலெக்டரை சந்தித்து, குறைகேட்பு கூட்டத்தில் மனு அளித்தனர்.----கலெக்டரிடம் மனு அளிக்க வந்த, அவிநாசி அடுத்த சேவூர் வி.ஐ.பி., கார்டன் குடியிருப்போர்.

தீண்டாமை சுவரை அகற்றுங்கள்

கலெக்டரிடம் மீண்டும் மனுமனோன்மணி தலைமையில் தேவேந்திரன் நகர் பகுதியினரும், கலெக்டரிடம் நேற்று மீண்டும் மனு அளித்தனர்.அதில், 'தீண்டாமை சுவர் தொடர்பாக விசாரணைக்கு வரும் அரசு அதிகாரிகள், வி.ஐ.பி., கார்டன் பகுதியில் மட்டும்தான் விசாரிக்கின்றனர். கடந்த, 30 ஆண்டுகளுக்கு முன், சேவூர் பகுதி மாரியம்மன் கோவில் பகுதியில், எங்களை உள்ளே செல்ல அனுமதி மறுத்தனர்; அப்போதுமுதல், தீண்டாமைக்கு எதிராக போராடிவருகிறோம். தீண்டாமை சுவரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, குறிப்பிட்டுள்ளனர்.----தீண்டாமை சுவரை அகற்றக்கோரி மனு அளித்த தேவேந்திரன் நகர் பகுதியினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ