பாதுகாப்பான முறையில் குப்பை கொட்ட தீர்மானம்
திருப்பூர்: மாநகராட்சி பகுதியில் சேகரமாகும் குப்பைகளை தனியார் பாறைக்குழிகளில் கொண்டு சென்று கொட்ட மாநகராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருப்பூர் மாநகராட்சியில் நிலவும் குப்பை விவகாரத்தில் கோர்ட் அறிவுரையின் படி மாற்று வழிமுறைகள் மேற்கொண்டு குப்பைகள் அகற்றுவது குறித்த மாநகராட்சி சிறப்பு கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: மாநகராட்சி பகுதியில் சேகரமாகும் திடக்கழிவுகளை தங்களுக்குச் சொந்தமான, பயன்பாட்டில் இல்லாத பாறைக்குழிகளில் கொட்டி நிரப்பித்தருமாறு, அதன் உரிமயைாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மாவட்ட நிர்வாகம் அதற்கான அனுமதியை அளித்துள்ளது. அந்த பாறைக்குழிகளில் பாதுகாப்பான நடைமுறைகளைப் பின்பற்றி திடக்கழிவுகள் கொண்டு சேர்க்கப்படும். சேகரிக்கப்பட்ட குப்பைகள் தரம் பிரிப்பு மையம் அமைக்க 17.43 ஏக்கர் பரப்பிலான, தனியாருக்குச் சொந்தமான நிலங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றை மாநகராட்சி நிர்வாகம் கிரயம் செய்து பயன்படுத்துவது; அந்த இடத்தைச் சுற்றிலும் 100 மீ., சுற்றளவில் வளர்ச்சி மற்றும் கட்டுமானத் தடை மண்டலமாக அரசிதழில் அறிவிக்க நடவடிக்கை எடுப்பது என்று தீர்மானிக்கப்பட்டது. இடுவாய் பகுதியில் குப்பை தேக்கிவைக்கவுள்ள மாநகராட்சிக்குச் சொந்தமான இடத்தில், கோர்ட் வழங்கி வழிகாட்டுதலின் படியான நடவடிக்கைகள் மேற்கொள்வது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.