| ADDED : ஜன 04, 2024 12:33 AM
திருப்பூர் : காய்ச்சல் பரவும் அபாயம் இருப்பதால், சின்னாண்டிபாளையம் பிரிவில் கழிவுநீர் கலந்த மழைநீர் தேங்குவதை தடுக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்னாண்டிபாளையம் பிரிவில், சிறிய மழை பெய்தாலும் போக்குவரத்து பாதிக்கிறது. சுத்திகரிப்பு நிலையம் மற்றும் தண்ணீர் தொட்டி வளாகத்தில் இருந்து கசிந்து வரும் தண்ணீர், மங்கலம் ரோட்டில் வழிந்தோடி, குளத்துக்குள் சென்று கலக்கிறது.சின்னாண்டிபாளையம் பிரிவு பகுதிகளில் உள்ள மழைநீர், குடிநீர் நீரேற்று மையத்துக்குள் தேங்குகிறது. கடந்த சில வாரங்களாக, பஸ் ஸ்டாப் அருகே, கழிவுநீர் கால்வாயில் வரும் தண்ணீர் ரோட்டை கடந்து, வழிந்தோடி குளத்துக்குள் சென்று சேர்கிறது.மீன் கடைகள் மற்றும் ஓட்டல் கழிவுகள் கலக்கும் சாக்கடை கால்வாய் வழியாக வரும் தண்ணீரில், மக்கள் நடந்து செல்ல வேண்டியுள்ளது. தினமும் அவ்வழியே சென்றுவரும் டூவீலர்களும், கழிவுநீரை தெறிக்கவிட்டபடி சென்று வருகின்றன.மாநகராட்சி நிர்வாகம், தேங்கியுள்ள கழிவுநீர் கலந்த மழைநீரை உறிஞ்சி அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிவரும் நாட்களிலும், சின்னாண்டிபாளையம் பிரிவு பகுதியில் மழைநீர் தேங்காமல் வழிந்தோடும் வகையில், பெரிய கால்வாய் வசதிகளை செய்ய வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.