| ADDED : நவ 22, 2025 06:00 AM
திருப்பூர்: திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, அவிநாசி வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு ஆகியன சார்பில், பெருமாநல்லுாரில் உள்ள கே.எம்.சி. சட்டக்கல்லுாரியில், சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. உலகம் முழுவதும் சாலை விபத்துகளால் உயிரிழந்த அல்லது செயல்பட முடியாத அளவு பாதிக்கப்பட்டோர் நினைவு தினத்தை முன்னிட்டு, 'சாலை விதிகள் மற்றும் சாலை போக்குவரத்து பாதுகாப்பு' குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இம்முகாம் நடத்தப்பட்டது. கே.எம்.சி. சட்டக்கல்லுாரி முதல்வர் சவுந்திரபாண்டியன் வரவேற்றார். அவிநாசி சட்டப்பணிகள் ஆணைக்குழு வக்கீல் பிரகாஷ், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் குமரன், எஸ்.ஐ., லோகநாதன் முன்னிலை வகித்தனர். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி சந்தோஷ் தலைமை வகித்து பேசுகையில், ''சாலை விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். அதனை மீறும்போது ஏற்படும் இழப்புகள் ஈடுசெய்ய முடியாத அளவில் உள்ளது. நம் குடும்பம், எதிர்காலம் ஆகியன கருதி அவற்றை முறையாகப் பின்பற்ற வேண்டும். சாலை விதிகளை மதிப்பது என்பது ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் கடமை,'' என்றார். 'இழந்த திறமைகள்' சாலை விபத்துகளில், உலக அளவில் ஆண்டுதோறும் 13,50,000 பேர் உயிரிழப்பதாக ஐ.நா. சபை ஆய்வு தெரிவிக்கிறது. இதில், 5 முதல் 29 வயதுடையோர் அதிகளவில் சாலை விபத்துகளில் உயிரிழக்கின்றனர். சாலையில் நடக்கும் பாதசாரிகள், சைக்கிள் ஓட்டுவோர், இரு சக்கர வாகனங்களில் செல்வோர் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இது போல் பாதிக்கப்படுவோர் நினைவாக ஆண்டுதோறும் நவ., மாதம் இந்த தினம் பின்பற்றப்படுகிறது. நடப்பாண்டில் 'இழந்த திறமைகள்' என்ற கருப்பொருளில் இந்த தினம் அனுசரிக்கப்பட்டது.