| ADDED : ஜன 21, 2024 01:01 AM
பல்லடம்:மது அருந்த பணம் இல்லாததால், வழிப்பறியில் ஈடுபட முயன்ற கஞ்சா 'பாய்ஸ்' இருவரை, பொதுமக்களே 'கவனித்து' போலீசாரிடம் ஒப்படைத்தனர்.ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி பகுதியை சேர்ந்த சிலர், பல்லடம் அருகே, அருள்புரத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்துவிட்டு, ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். அருள்புரம், அண்ணா நகர் அருகே நடந்து சென்றபோது, கஞ்சா ஆசாமிகள் இருவர், வழிப்பறியில் ஈடுபட முயன்றனர்.மது அருந்த பணம் வேண்டும் என்றும், கழுத்தில் அணிந்துள்ள தங்கச் செயினை கழட்டித் தருமாறும் மிரட்டியுள்ளனர். இதனால், பயந்து போனவர்கள், அருகிலுள்ள கடை ஒன்றுக்குள் புகுந்தனர். அங்கு நடந்ததை கூறிய போது, பொதுமக்கள் ஒன்று கூடி கஞ்சா ஆசாமிகள் இருவரையும் 'அடித்து துவைத்து' உட்கார வைத்தனர்.அதன்பின், பல்லடம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். பிடிபட்ட 'கஞ்சா பாய்ஸ்' இருவரும் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். போலீசார் இவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.பொதுமக்கள் கூறுகையில், 'அருள்புரம், சின்னக்கரை சுற்றுவட்டார பகுதியில், கஞ்சா விற்பனை அதிக அளவில் நடந்து வருகிறது. எண்ணற்ற தொழிலாளர்கள், இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி வருகின்றனர்.இதனால், இது போன்ற அசம்பாவிதங்கள் நடக்கின்றன. போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். அருள்புரம் பகுதியில் ரோந்து பணியை அதிகரிக்க வேண்டும்,' என்றனர்.