திருப்பூர்: கொரோனாவின் போது நிறுத்தப்பட்டு, நான்கு ஆண்டுகள் கடந்தும், சேலம் - ஈரோடு - திருப்பூர் - கோவை பாசஞ்சர் இயக்கம் இன்னும் துவங்கவில்லை. வியாழன் தவிர வாரத்தின் ஆறு நாட்கள் சேலத்தில் இருந்து ஈரோடுக்கு மெமு பாசஞ்சர் ரயில் நேற்று முதல் இயக்கப் படுகிறது. காலை 6:15க்கு புறப்படும் ரயில், 7:25க்கு ஈரோடு வந்தடைகிறது. மறுமார்க்கமாக, இரவு 7:30க்கு புறப்பட்டு, இரவு, 8:45க்கு சேலம் சென்றடைகிறது. சேலத்தில் இருந்து கோவைக்கு மெமு ரயில் 2008 முதல் இயங்கி வந்தது. ரயில் கோவை வடக்கு, பீளமேடு, சிங்காநல்லுார், இருகூர், சூலுார் ரோடு, சோமனுார், வஞ்சி பாளையம், திருப்பூர், ஊத்துக்குளி, விஜயமங்கலம், ஈங்கூர், பெருந்துறை, தொட்டிபாளையம், ஈரோடு, காவிரி, ஆனங்கூர், சங்ககிரி, மாவேலிபாளையம், மகுடஞ்சாவடி உள்ளிட்ட நான்கு மாவட்ட ஸ்டேஷன்களில் பெரும்பாலான ஸ்டேஷனில் நின்று பயணித்தது. கடந்த, 2020 - 2021ல், கொரோனாவின் போது நிறுத்தப்பட்ட ரயில், நான்கு ஆண்டுகளாகியும் மீண்டும் இயக்கத்துக்கு கொண்டு வரப்படவில்லை. கல்லுாரி மாணவர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக் கானோர் தினமும் பஸ்சில் பயணிக்கின்றனர். ரயில் பயணிகள் கூறுகையில், ''மேற்கு மண்டலத்தை பொறுத்தவரை கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் நான்கு மாவட்டத்தை இணைக்கும் ஒரே பாசஞ்சர் ரயிலாக சேலம் மெமு ரயில் இருந்தது. ஞாயிற்றுக்கிழமை தவிர, வாரத்தின் ஆறு நாட்கள் இயங்கியதால், 1,500க்கும் மேற்பட்டோர் மாதாந்திர சீசன் பாஸ் எடுத்து பயணித்து வந்தனர். சேலம் - ஈரோடு மெமு ரயில் அறிவிப்பை போன்று, சேலம் - கோவை மெமு ரயில் அறிவிப்பையும் வெளியிட வேண்டும்'' என்றனர்.