மாற்றுத்திறனாளி கரங்களில் ஸ்கூட்டர் தினமலர் செய்தி எதிரொலி
'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியாக, ஆர்.சி., புக் கிடைத்த நான்கு மாதங்களுக்கு பின், மாற்றுத்திறனாளிக்கு ஒதுக்கிய ஸ்கூட்டர் கிடைத்துள்ளது.திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில், ஸ்கூட்டர் வழங்குவதில் பல்வேறு முறைகேடு நடந்து வருதாக புகார் எழுந்துள்ளது.ஆர்.சி., புக் வழங்கி நான்கு மாதங்களுக்கு மேலாகியும், ஸ்கூட்டர் வழங்கவில்லையென, கருவம்பாளையத்தை சேர்ந்த வெங்கடேஸ்வரன் புகார் தெரிவித்திருந்தார்.இவருக்கு ஒதுக்கீடு செய்த ஸ்கூட்டர், வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டு, கடந்த ஜன., மாதம் ஆர்.சி. புக் வழங்கப்பட்டுள்ளது.நான்கு மாதங்களாகியும், ஸ்கூட்டர் கிடைக்கவில்லை. இதுதொடர்பான செய்தி, 'தினமலர்' நாளிதழில் வெளியானது.இதுகுறித்து, திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்க தலைவர் சரவணன் புகார் அளித்திருந்தார். அதன்படி, மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து, முறைகேடாக வழங்கப்பட்டிருந்த நபரிடம் இருந்து பறிமுதல் செய்து, டி.என்.39.டிடி.9039 என்ற பதிவு எண்ணுள்ள ஸ்கூட்டர், நேற்று வெங்கடேஸ்வரனுக்கு வழங்கப்பட்டது.நான்கு மாதங்களாக புகார் அளித்தும், தனக்கு ஒதுக்கப்பட்ட ஸ்கூட்டர் கிடைக்காமல் இருந்தது.நுகர்வோர் நல சங்கத்தினரின் முயற்சியாலும், 'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியாகவும்,தனக்கு ஸ்கூட்டர் கிடைத்துள்ளதாக, மாற்றுத்திறனாளி வெங்கடேஸ்வரன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.