திருப்பூர்:''பொதுநலனில் ஈடுபடும் பசுமை ஆர்வலர்களால், சமுதாயம் நம்பிக்கை பெறுகிறது,'' என, அமைச்சர் கயல்விழி பேசினார்.'வனத்துக்குள் திருப்பூர்-9' திட்டத்தில், மூலனுார் துாரம்பாடியில், பொது இடத்தில், அனிதா டெக்ஸ்காட் நிறுவனம், ஆறுமுகம் அறக்கட்டளை சார்பில், சீமைக்கருவேல மரங்களை அகற்றி, எட்டு அடி உயரம் வளர்ந்த நிலையில் உள்ள, 800 மரக்கன்றுகள் நேற்று நடப்பட்டன. 'வெற்றி' அமைப்பு தலைவர் சிவராம் வரவேற்று பேசுகையில், தாராபுரம் தாலுகா சுற்றுப்பகுதியில், அனிதா டெக்ஸ்காட் நிறுவனத்தினர், 1.50 லட்சம் மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பது குறித்து பாராட்டினார்.கலெக்டர் கிறிஸ்துராஜ் பேசுகையில், ''வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில், ஒன்பது ஆண்டுகளில், 18 லட்சம் மரக்கன்றுகள் வளர்ப்பது என்பது, மிகப்பெரிய சாதனை. ஒரத்துப்பாளையம் அணை பகுதியில், ஒரு லட்சம் மரக்கன்றுகள் நட்டு வளர்க்க அனுமதி பெற்றுத்தர வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுநலன் மட்டுமே 'வெற்றி' அமைப்பின் செயல்பாடாக இருக்கிறது; இன்னும், இதுபோன்ற பசுமை சார் பொதுநல அமைப்புகள் உருவாக வேண்டும். ஆறுமுகம் அறக்கட்டளை செய்ததை போல், நானும் எனது தாய் பிறந்த ஊரில் என்னால் முடிந்த சமூக பணியை செய்வேன்'' என்றார்.அமைச்சர் கயல்விழி பேசுகையில், ''அனிதா டெக்ஸ்காட் நிறுவனமும், ஆறுமுகம் அறக்கட்டளையும் இணைந்து, வெள்ளம் பாதித்த மாவட்டங்களுக்காக, ஒரு கோடி ரூபாயில் நிவாரண உதவி வழங்கினர்.தாராபுரம் பகுதியில், குறைந்த கட்டணத்தில் இயங்கும் மருத்துவ சேவையை துவக்கியுள்ளனர். பொருளீட்டுவதற்காக, திருப்பூர், சென்னையை நோக்கி சென்றாலும், வேர்களை மறக்காமல், பிறந்த ஊருக்கு வேண்டிய உதவியை செய்கின்றனர்; 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தினர் போன்ற பொதுநலனில் ஈடுபடும் பசுமை ஆர்வலர்களால், சமுதாயம் நம்பிக்கை பெறுகிறது,'' என்றார்.மாநகராட்சி 4வது மண்டல தலைவர் பத்மநாபன், அனிதா டெக்ஸ்காட் நிர்வாக இயக்குனர் சந்திரசேகர் உட்பட, 'வனத்துக்குள் திருப்பூர்' திட்ட குழுவினர் பங்கேற்றனர். இத்திட்டத்தில் மரம் வளர்க்க விரும்புவோர், 90470 86666 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம் என்று தெரிவித்துள்ளனர்.